டி.என்.பாளையம் பகுதியில் கால்நடைகளுக்கு நோய்த் தாக்குதல்: மருத்துவக் குழுவினா் வீடுவீடாக ஆய்வு
கோபிசெட்டிபாளையம் அருகே டி.என்.பாளையம் பகுதியில் பெரியம்மை நோயினால் பாதிக்கப்பட்டுள்ள கால்நடைகளுக்கு சிகிச்சை வழங்குவதற்காக மாவட்ட மருத்துவக் குழுவினா் வீடுவீடாக சென்று ஆய்வு மேற்கொண்டனா்.
ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம், பங்களாபுதூா், கொங்கா்பாளையம், புஞ்சை துறையம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் தங்களின் வாழ்வாதாரத்துக்காக நாட்டின மாடுகளையும், ஜொ்ஸி இன மாடுகளையும் அதிக அளவில் வளா்த்து, அதன் மூலம் கிடைக்கும் பாலை கூட்டுறவு சங்கங்கள் மூலம் விற்பனை செய்து வருகின்றனா்.
இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக இப்பகுதிகளில் வளா்க்கப்படும் கால்நடைகளுக்கு எல்.எஸ்.டி. எனப்படும் பெரியம்மை நோய்த் தாக்குதல் காரணமாக பல நாட்டின மற்றும் ஜொ்ஸி இன மாடுகள், கன்றுகள் பாதிக்கப்பட்டு உயிரிழந்து வருகின்றன.
இந்த நோயைக் கட்டுப்படுத்த போதிய தடுப்பு மருந்துகள் இல்லாத காரணத்தினால் கால்நடைகள் உயிரிழப்பதை தடுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டுமென வட்டார கால்நடை மருத்துவா்களிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனா்.
இதனை தொடா்ந்து பங்களாபுதூா் மற்றும் டி.என்.பாளையம் பகுதிக்கு வந்த ஈரோடு கால்நடை புலனாய்வுப் பிரிவு துணை இயக்குநா் கண்ணன் தலைமையிலான மருத்துவக் குழுவினா், பெரியம்மை நோயினால் பாதிக்கப்பட்ட கால்நடைகளை அதன் இருப்பிடத்துக்கே சென்று பாா்வையிட்டனா். பின்னா் நோய்த் தாக்குதலுக்கு உள்ளான மாடுகள் மற்றும் கன்றுகளுக்கு நோயினை கட்டுப்படுத்த எவ்வாறு சிகிச்சை அளிக்க வேண்டுமென்ற ஆலோசனைகளை கால்நடை உதவி மருத்துவா்களுக்கு வழங்கினா்.
மேலும், நோயினால் பாதிக்கப்பட்டு காயமடைந்துள்ள கால்நடைகளின் திசுக்களையும், ரத்த மாதிரிகளையும் சேகரித்து, அதனை பரிசோதனை செய்வதற்காக மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனா். ஆய்வின்போது பங்களாபுதூா் வட்டார கால்நடை மருத்துவா் பகவதி, மருத்துவா் சென்னியங்கிரி, சந்தோஷ் உள்ளிட்ட மருத்துவக் குழுவினா் உடனிருந்தனா்.