டென்மார்க்: செல்லப்பிராணியை விலங்குகளுக்கு உணவளிக்க கேட்கும் பூங்கா - பின்னணி என்ன?
டென்மார்க்கைச் சேர்ந்த 44 வயது பெண்மணி ஒருவர் மகள் வளர்த்த குதிரையை ஆல்போர்க் உயிரியல் பூங்காவிற்கு நன்கொடையாக அளித்துள்ளார். கடுமையான தோல் நோயால் பாதிக்கப்பட்டுள்ள குதிரையை சிங்கங்களுக்கு உணவாக அளிக்க பூங்காவிற்கு கொடுத்துள்ளார்.
ஆல்போர்க் உயிரியல் பூங்கா, சிறிய மற்றும் ஆரோக்கியமான செல்லப்பிராணிகளை வேட்டையாடும் விலங்குகளுக்கு உணவாக அளிக்குமாறு கோரியதற்கு எதிர்ப்பு எழுந்த நிலையில், இந்த தகவல் வெளியாகியுள்ளது.

பெர்னில் சோல் என்ற பெண்மணி டென்மார்க்கின் அசென்ஸ் பகுதியில் ஒரு சிறிய பண்ணையை நடத்தி வருகிறார்.
அவர் தி டைம்ஸ் இதழிடம் பேசுகையில், ”2020ஆம் ஆண்டு எனது ஜெர்மன் குதிரையை சிங்கங்களுக்கு உணவாக கொடுக்க முடிவு செய்தேன், இது மிகவும் அதிர்ச்சியாகவும் விசித்திரமாகவும் தோன்றலாம். ஆனால் குதிரை கடுமையான நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் இந்த விலங்குகள் எப்படியும் கழுத்தறுக்கப்படவே இருந்தன” என்று விளக்கினார்.
ஆல்போர்க் உயிரியல் பூங்காவின் நோக்கம்
ஆல்போர்க் உயிரியல் பூங்கா, வேட்டையாடும் விலங்குகளுக்கு இயற்கையான உணவு சங்கிலியைப் பின்பற்றுவதாகக் கூறுகிறது. இது விலங்குகளின் நலன் மற்றும் தொழில்முறை நேர்மையை உறுதிப்படுத்துவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த ஆண்டு இதுவரை, உயிரியல் பூங்கா 22 குதிரைகள், 53 கோழிகள், 137 முயல்கள் மற்றும் 18 கினிப் பன்றிகளை நன்கொடையாக பூங்கா பெற்றுள்ளது.
சோல் இந்த நன்கொடைக்கு எந்தப் பணமும் பெறவில்லை என்று கூறப்படுகிறது.
உயிரியல் பூங்காவின் கோரிக்கை
சமீபத்தில், ஆல்போர்க் உயிரியல் பூங்கா, கோழிகள், முயல்கள் மற்றும் கினிப் பன்றிகள் போன்ற "விரும்பப்படாத விலங்குகளை" நன்கொடையாக அளிக்குமாறு கோரியது.
இந்த செல்லப்பிராணிகள் கழுத்தறுக்கப்பட்டு பின்னர் மாமிச உண்ணிகளுக்கு உணவாக அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்படிருந்தது. சிலர் செல்லபிராணிகளை நன்கொடையாக வழங்கினாலும் இவ்வாறு பூங்கா கோரியதற்கு எதிர்ப்பு எழுந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.