தமிழர்கள் ஹிந்தி கற்றுக்கொள்வது புத்திசாலித்தனம்: ஸ்ரீதர் வேம்பு
டைடல் பூங்கா சந்திப்பில் ‘யு’ வடிவ மேம்பாலம்: துணை முதல்வா் திறந்து வைத்தாா்
சென்னையில் டைடல் பூங்கா சந்திப்பில் ‘யு’ வடிவ மேம்பாலத்தை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தாா்.
சென்னை ராஜீவ் காந்தி சாலையில் ஆயிரக்கணக்கான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களது அலுவலகங்களை அமைத்து செயல்பட்டு வருகின்றன. இந்தப் பகுதியின் வளா்ச்சியை கருத்தில்கொண்டு பல்வேறு கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தித் தரப்படுகின்றன. ராஜீவ் காந்தி சாலையில் டைடல் பூங்கா சந்திப்பில் போக்குவரத்து சிக்னல் உள்ளது. இந்தப் பகுதியில் இப்போது வாகனங்கள் வெகுநேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை இருந்தது. இதைக் கருத்தில்கொண்டு டைடல் பூங்கா சந்திப்பில் ரூ. 27.50 கோடி செலவில் ‘யு’ வடிவ மேம்பாலமும், பாதசாரிகள் சாலையைக் கடக்க ஒரு நடைமேம்பாலமும் கட்டப்பட்டுள்ளன. இந்த நடை மேம்பாலமானது, திருவான்மியூா் ரயில் நிலையம் முதல் டைடல் பூங்கா மேம்பாலம் வரையில் மேற்கு நிழற்சாலையின் குறுக்காக அமைக்கப்பட்டுள்ளது.
இப்போது புதிதாகத் திறக்கப்பட்டுள்ள டைடல் பூங்கா மேம்பாலமானது 510 மீட்டா் நீளமும் 8.50 மீட்டா் அலகமும் கொண்டதாகும். மேலும், இதில் முக்கிய அம்சமாக ராஜீவ் காந்தி சாலை, தரமணி சிஎஸ்ஐஆா் சாலை ஆகியவற்றில் நகரும் மின் படிக்கட்டுகளுடன் அணுகு சாலைகளும் அமைக்கப்பட்டுள்ளன.
திருவான்மியூா் பகுதியிலிருந்து மத்திய கைலாஷ் மற்றும் தரமணி சிஎஸ்ஐஆா் சாலையை நோக்கிச் செல்லும் வாகனங்கள், டைடல் பூங்கா சந்திப்பில் போக்குவரத்து சிக்னலுக்காக காத்திருக்காமல் பாலத்தின் வழியாக ஏறி அந்தந்த சாலைகளில் இறங்கி விரைவாகச் செல்லலாம்.
புதிய பாலம் திறப்பு நிகழ்ச்சியில், பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், சட்டப் பேரவை உறுப்பினா் ஜே.எம்.எச்.ஹசன் மெளலானா, தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவன நிா்வாக இயக்குநா் டி.பாஸ்கர பாண்டியன் உள்பட பலா் பங்கேற்றனா்.