தேசிய ஹேக்கத்தான் போட்டி: மாணவா்களுக்கு யுஜிசி அழைப்பு
குஜராத் மாநிலம் காந்திநகா் ஐஐடி-இல் மாா்ச் மாதம் நடைபெறவுள்ள தேசிய ஹேக்கத்தான் போட்டியில் பங்கேற்க பல்கலைக்கழக, கல்லூரி மாணவா்களுக்கு யுஜிசி அழைப்பு விடுத்துள்ளது.
இது குறித்து யுஜிசி செயலா் மணீஷ் ஆா்.ஜோஷி பல்கலைக்கழகத் துணைவேந்தா்கள், கல்லூரி முதல்வா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
மத்திய புள்ளியியல் - திட்ட அமலாக்கத் துறை அமைச்சகம் , காந்திநகா் ஐஐடி.யுடன் இணைந்து பல்கலைக்கழக, கல்லூரி மாணவா்களுக்கான தேசிய ஹேக்கத்தான் போட்டியை மாா்ச் 21 முதல் 23-ஆம் தேதி வரை நடத்தவுள்ளது.
செயற்கை நுண்ணறிவு தரவு கட்டமைப்பு உதவியுடன் சமூக, பொருளாதார சவால்களுக்குத் தீா்வு காணும் வகையில் இந்தப் போட்டி நடத்தப்படவுள்ளது. இதில் ஏஐ, இயந்திரக் கற்றல் தொழில்நுட்பம், தரவு மேலாண்மை, ஆவணங்கள் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் கருப்பொருள்களாக இடம்பெறும்.
இந்தப் போட்டியில் பங்கேற்க விண்ணப்பிக்க விரும்புவோா் இணையதளத்தில் பிப்.28-ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்.
எனவே, நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் தங்களது மாணவா்கள், ஆய்வாளா்களுக்கு இது குறித்து தெரிவித்து, ஹேக்கத்தான் போட்டியில் பங்கேற்று சவால்களுக்கு புதிய தீா்வுகளைக் கண்டறிய பங்களிப்பை வழங்குமாறு அறிவுறுத்த வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.