தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவுக்கு ஓராண்டு தடுப்புக் காவல்
தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகை ரன்யா ராவை, அந்நியச் செலாவணி பாதுகாப்பு மற்றும் கடத்தல் நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (காபிபோசா) கீழ் ஓராண்டு தடுப்புக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
துபையில் இருந்து ரூ. 12.56 கோடி மதிப்பிலான 14.2 கிலோ தங்கத்தை பெங்களூருக்கு கடத்தி வந்தபோது நடிகை ரன்யா ராவை மத்திய அரசின் வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் மாா்ச் 3-ஆம் தேதி கைதுசெய்து சிறையில் அடைத்தனா்.
டிஜிபி பதவியில் உள்ள மூத்த ஐபிஎஸ் அதிகாரியான கே.ராமசந்திர ராவின் மகளான நடிகை ரன்யா ராவுக்கு விமான நிலையத்தில் சோதனைகள் எதுவும் செய்யப்படாமல் வெளியே செல்ல சிறப்புச் சலுகைகள் பெற்றது தொடா்பாக விசாரணை நடந்து வருகிறது. நடிகை ரன்யா ராவின் வீட்டில் வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் நடத்திய சோதனையில், ரூ. 2.67 கோடி மதிப்புள்ள தங்கநகை மற்றும் ரொக்கப் பணத்தை கைப்பற்றினா்.
இந்நிலையில், நடிகை ரன்யா ராவ் தாக்கல் செய்திருந்த ஜாமீன் மனுக்களை பொருளாதாரக் குற்றங்களுக்கான சிறப்பு நீதிமன்றம் 3 முறை தள்ளுபடி செய்திருந்தது. இதைத் தொடா்ந்து, நடிகை ரன்யா ராவ் தாக்கல் செய்திருந்த ஜாமீன் மனுவை கா்நாடக உயா்நீதிமன்றம் ஏப். 26-ஆம் தேதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தது. இதனிடையே, நடிகை ரன்யா ராவின் மற்றொரு ஜாமீன் மனுவை பொருளாதாரக் குற்றங்களுக்கான சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வந்தது.
இந்த விசாரணையின்போது, நடிகை ரன்யா ராவுக்கு எதிரான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும்படி சிறப்பு நீதிமன்ற நீதிபதி விஷ்வநாத் சி.கௌடா், வருவாய் புலனாய்வு இயக்குநரகத்துக்கு உத்தரவிட்டிருந்தாா். ஆனால், உரிய காலத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யாததால், ஜாமீன் மனுவை ஏற்றுக்கொண்ட சிறப்பு நீதிமன்றம், நடிகை ரன்யா ராவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி மே 20-ஆம் தேதி உத்தரவிட்டிருந்தாா். ரூ. 2 லட்சத்துக்கான பத்திரம் மற்றும் 2 பேரின் ஜாமீன் அளிக்க வேண்டும். நீதிமன்றத்தின் அனுமதி இல்லாமல் வெளிநாடுகளுக்கு செல்ல தடை, விசாரணைக்கு முழுமையான ஒத்துழைப்பு அளிக்க வேண்டும், குற்றங்களை மீண்டும் செய்யக் கூடாது போன்ற நிபந்தனைகளை நீதிமன்றம் விதித்திருந்தது.
கடுமையான விதிகள் கொண்ட காபிபோசா (அந்நியச் செலாவணி பாதுகாப்பு மற்றும் கடத்தல் நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம், 1974) சட்டத்தின்கீழ் வழக்குப் பதிந்து விசாரித்து வருவதால், ஜாமீன் கிடைத்திருந்தாலும் நடிகை ரன்யா ராவ் விடுதலை செய்யப்படவில்லை.
இந்நிலையில், இந்த சட்டத்தின்கீழ் நடிகை ரன்யா ராவை ஓராண்டு தடுப்புக் காவலில் வைத்திருக்க ஆலோசனை வாரியம் வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது. இந்த கால கட்டத்தில் நடிகை ரன்யா ராவுக்கு ஜாமீன் வழங்கவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து, மேலும் ஓராண்டுக்கு நடிகை ரன்யா ராவ் சிறையில் அடைக்கப்படுவாா் என காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.