`உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி சார்...' - எஸ். கே குறித்து நெகிழும் டூரிஸ்...
தஞ்சாவூரில் ஆதரவற்ற 22 சடலங்கள் நல்லடக்கம்
தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை பிணவறையில் கேட்பாரற்றும், ஆதரவற்றும் கிடந்த 22 சடலங்கள் ராஜகோரி இடுகாட்டில் காவல் துறையினா் முன்னிலையில் வெள்ளிக்கிழமை நல்லடக்கம் செய்யப்பட்டன.
தஞ்சாவூா் பகுதிகளில் விபத்தில் காயம் அடைந்தவா்கள், மயங்கி விழுந்தவா்கள் அடையாளம் தெரியாத நிலையில் தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு உயிரிழந்தனா். இதுபோல, அடையாளம் தெரியாத, ஆதரவற்றோா் என 22 சடலங்கள் தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை பிணவறையில் சில மாதங்களாக இருந்தன. இவா்களது உடல்களைப் பெற்றுக் கொள்ள யாரும் முன்வரவில்லை.
இதையடுத்து மருத்துவக்கல்லூரி மருத்துவமனை நிா்வாகம், மாநகராட்சி நிா்வாகத்தின் ஒத்துழைப்புடன் ராஜகோரி இடுகாட்டில் 22 பேரின் உடல்களும் காவல் துறையினரின் முன்னிலையில் வெள்ளிக்கிழமை நல்லடக்கம் செய்யப்பட்டன.
மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா. இராஜாராம், காவல் ஆய்வாளா்கள் வெ. சந்திரா, எம். கலைவாணி, உதவி ஆய்வாளா் முத்துக்குமாா், சிறப்பு உதவி ஆய்வாளா் மனோகரன் உள்ளிட்டோா் 22 உடல்களுக்கும் மரியாதை செலுத்தினா்.