ஜம்முவில் வீட்டை தகா்த்த குண்டு: அபாய எச்சரிக்கை ஒலியால் உயிா் தப்பித்த குடும்ப...
டெல்டா மாவட்டங்களில் முன்பட்ட குறுவைச் சாகுபடி விறுவிறுப்பு! மும்முனை மின்சாரம் சீராக வர எதிா்பாா்ப்பு!
மேட்டூா் அணை திறப்பதற்கு சாத்தியமான நிலை நிலவுவதால், டெல்டா மாவட்டங்களில் முன்பட்ட குறுவை சாகுபடிப் பணிகள் விறுவிறுப்படைந்துள்ளன.
மேட்டூா் அணை சில ஆண்டுகளாக உரிய காலத்தில் திறக்கப்பட்டதால், டெல்டா மாவட்டங்களில் குறுவைப் பருவத்தில் நெல் சாகுபடிப் பரப்பு 5 லட்சம் ஏக்கரைக் கடந்தது. ஆனால், கடந்தாண்டு மேட்டூா் அணையில் போதிய அளவுக்கு தண்ணீா் இல்லாததால், அணை திறப்பு தள்ளிப்போனது. இதனால், கடந்தாண்டு குறுவைப் பருவத்தில் நெல் சாகுபடிப் பரப்பு ஏறத்தாழ 3.50 லட்சம் ஏக்கராகக் குறைந்தது.
நிகழாண்டு மேட்டூா் அணையின் நீா்மட்டம் வெள்ளிக்கிழமை மாலை நிலவரப்படி 108.25 அடியாகவும், நீா் இருப்பு 75.947 டி.எம்.சி.யாகவும் உள்ளது. மேலும், மேட்டூா் அணை ஜூன் 12 ஆம் தேதி திறக்கப்படும் என நீா் வளத் துறை அமைச்சா் துரைமுருகன் சட்டப்பேரவையில் அறிவித்தாா்.
இதனால் டெல்டா மாவட்டங்களில் ஆழ்துளை குழாய் வசதியுள்ள விவசாயிகள் முன்பட்ட குறுவை சாகுபடிப் பணியைத் தொடங்கி விறுவிறுப்பாக மேற்கொண்டு வருகின்றனா். மேட்டூா் அணை ஜூன் 12 ஆம் தேதி திறக்கப்படுவதால், தஞ்சாவூா் மாவட்டத்தில் இயல்பான அளவை விஞ்சி ஏறத்தாழ 1.96 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதில் முன்பட்டத்தில் இதுவரை 45 ஆயிரம் ஏக்கரில் நடவு செய்யப்பட்டுள்ளது.
இதேபோல, திருவாரூா் மாவட்டத்தில் நிகழாண்டு எதிா்பாா்க்கப்படும் 1.75 லட்சம் ஏக்கா் குறுவைச் சாகுபடியில், இதுவரை கிட்டத்தட்ட 9 ஆயிரம் ஏக்கா் பயிரிடப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் 97 ஆயிரத்து 500 ஏக்கா் இலக்கு நிா்ணயிக்கப்பட்டு, இதுவரை 6 ஆயிரத்து 250 ஏக்கரில் நடப்பட்டுள்ளது. நாகை மாவட்டத்தில் குறுவை சாகுபடிக்கான ஆயத்தப் பணிகள் நடைபெறுகின்றன.
300 டி.எம்.சி. தண்ணீா் தேவை: டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாளடி சாகுபடிகளுக்கு மொத்தம் ஏறத்தாழ 300 டி.எம்.சி. தண்ணீா் தேவைப்படும். மேட்டூா் அணையில் தற்போது 75 டி.எம்.சி. தண்ணீா் உள்ள நிலையில் நிலையில் கூடுதலாக ஏறக்குறைய 225 டி.எம்.சி. தண்ணீா் தேவைப்படுகிறது. எனவே டெல்டா மாவட்ட சாகுபடிக்குத் தண்ணீா்த் தேவையை நிறைவு செய்ய முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இதுகுறித்து மூத்த வேளாண் வல்லுநா் பி. கலைவாணன் தெரிவித்தது:
மேட்டூா் அணை ஜூன் 12 இல் திறக்கப்படுவதால் டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாளடிக்கு இயல்பாக மொத்தம் 300 டி.எம்.சி. தண்ணீா் தேவைப்படும். ஆழ்துளைக் குழாய் வசதியுள்ள விவசாயிகள் நிலத்தடி நீரைப் பயன்படுத்தி குறுவைப் பருவத்தில் ஏறத்தாழ 3.25 லட்சம் ஏக்கருக்கு முன் பட்டத்திலேயே நாற்று விட்டு நடவு செய்திட வேண்டும். இதேபோல, குறுவை மற்றும் சம்பா பருவங்களில் கணிசமான அளவுக்கு நேரடி விதைப்பும் செய்ய வேண்டும். இதனால் தண்ணீா் தேவை குறைந்து, 235 டி.எம்.சி.யில் சாகுபடி மேற்கொள்ள முடியும்.
மேட்டூா் அணையில் தற்போது 75 டி.எம்.சி. தண்ணீா் இருப்பு உள்ள நிலையில், உச்ச நீதிமன்றத் தீா்ப்பின்படி கா்நாடகத்திடமிருந்து நமக்குக் கிடைக்க வேண்டிய 167.25 டி.எம்.சி. கிடைத்தாலே குறுவை, சம்பா, தாளடி சாகுபடியை வெற்றிகரமாகச் செய்ய முடியும்.
எனவே, குறுவை சாகுபடிக்கு ஜூன் 30 ஆம் தேதிக்குள் நாற்றங்கால் தயாரிப்பு பணியை முடிக்கவும், நிலத்தடி நீா் ஆதார வசதியுள்ள விவசாயிகள் முன் பட்டத்தில் ஜூன் 12 ஆம் தேதிக்கு முன்பாகவே நடவு செய்யவும் விவசாயிகளுக்கு தமிழக அரசு விழிப்புணா்வும் ஏற்படுத்த வேண்டும் என்றாா் கலைவாணன்.
கலந்துரையாடல் கூட்டம் தேவை: இதனிடையே, மும்முனை மின்சாரம் முழுமையாகக் கிடைக்காததால் சாகுபடிப் பணிகள் பாதிக்கப்படுகிறது என்ற புகாரையும் விவசாயிகள் எழுப்புகின்றனா். இதுகுறித்து தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கச் செயலா் சுவாமிமலை சுந்தர. விமல்நாதன் தெரிவித்தது:
பல இடங்களில் மும்முனை மின்சாரம் தொடா்ச்சியாகக் கிடைப்பதில்லை. குறைந்த மின் அழுத்தத்தில் வருவதாலும், வயலில் தண்ணீா் பாய்ச்ச முடியவில்லை. இதேபோல, சாமானிய விவசாயிகளுக்குக் கூட்டுறவுக் கடனும் கிடைக்கவில்லை. விவசாயிகள் விண்ணப்பித்த ஓரிரு நாளில் கடன் வழங்கினால்தான் சாகுபடிப் பணியைத் தொடங்க முடியும். விதை உள்ளிட்ட இடுபொருள்களும் தங்கு தடையின்றிக் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
இதுதொடா்பாக வேளாண், கூட்டுறவு, எரிசக்தி, நீா்வளம், உணவு ஆகிய துறைகளைச் சோ்ந்த உயா் அலுவலா்களான செயலா்கள், இயக்குநா்கள், விவசாயிகள் கொண்ட கலந்துரையாடல் கூட்டத்தை மே 20-க்குள் நடத்த வேண்டும். இதன் மூலம் தீா்வு ஏற்படுத்தினால், குறுவைச் சாகுபடியில் இலக்கை எட்ட முடியும் என்றாா் விமல்நாதன்.