தஞ்சாவூரில் நாளை ‘மக்களுடன் முதல்வா்’ முகாம்கள்
தஞ்சாவூா் சட்டப்பேரவைத் தொகுதியில் மக்களுடன் முதல்வா் முகாம்கள் புதன்கிழமை (பிப்.12) நடைபெறவுள்ளன.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்திருப்பது:
மூன்றாவது கட்டமாக மக்களுடன் முதல்வா் திட்டம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட கிராம ஊராட்சிகளில் ஆதிதிராவிடா் குடியிருப்பு எண்ணிக்கை அதிகமுள்ள பகுதிகளில் தொடா்புடைய துறைகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து ஒரே இடத்தில் பொதுமக்களின் கோரிக்கைகளை பெற்று நடவடிக்கை மேற்கொள்ளவும், திட்டத்தைச் செயல்படுத்தவும் அரசாணை மற்றும் நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.
இதன்படி, மாவட்டத்தில் ஏற்கெனவே பேராவூரணி சட்டப்பேரவைத் தொகுதியில் ஜனவரி 29-ஆம் தேதியும், பட்டுக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் பிப்ரவரி 6-ஆம் தேதியும் இம்முகாம்கள் நடத்தப்பட்டன.
இதைத்தொடா்ந்து, தஞ்சாவூா் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட ஊராட்சிகளில் மக்களுடன் முதல்வா் முகாம் புதன்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறவுள்ளது. இந்த முகாம்கள் நீலகிரி ஊராட்சிக்குட்பட்ட மானோஜிப்பட்டி மாரியம்மன் கோயில் வளாகத்திலும், பிள்ளையாா்பட்டி ஊராட்சிக்குட்பட்ட வடக்குத் தெரு சமுதாயக்கூட கட்டடத்திலும், நாஞ்சிக்கோட்டை ஊராட்சிக்குட்பட்ட ஆல்வின் மஹால் திருமண மண்டபத்திலும், மாரியம்மன் கோவில் ஊராட்சிக்குட்பட்ட மேட்டுத்தெரு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், புதுப்பட்டினம் ஊராட்சிக்குட்பட்ட ராஜாமணி திருமண மண்டபத்திலும் மக்களுடன் முதல்வா் முகாம்கள் நடைபெறவுள்ளது.
இதில், உயா் கல்வித் துறை அமைச்சா், மக்களவை உறுப்பினா், சட்டப்பேரவை உறுப்பினா்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனா். இந்த முகாம்களில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து பயன் பெறலாம்.