தஞ்சாவூர்: மருத்துவக்கல்லூரியில் எழும் பாலியல் குற்றச்சாட்டுகள்- நடவடிக்கை எடுக்குமா விசாகா கமிட்டி?
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் மருத்துவர் அல்லாத மருத்துவம் சார்ந்த பட்டய படிப்பு படிக்கும் மாணவி ஒருவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு அங்கு பயிலும் மாணவர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட மாணவி சில தினங்களுக்கு முன்பு பெண்கள் மீதான பாலியல் உள்ளிட்ட பிரச்னைகளை விசாரிக்கும் விசாகா கமிட்டிக்கு புகார் அனுப்பியுள்ளார்.

ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என சொல்லப்படுகிறது. இதையடுத்து, மாணவிக்கு பாலியல் தொந்தரவு செய்த மாணவரை உடனடியாக கல்லூரியில் இருந்து நீக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் வகுப்பை புறக்கணித்து தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி வளாகம் முன்பு கூடி போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து கல்லூரி முதல்வர் (பொறுப்பு) பாலசுப்பிரமணியன் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதுடன், பாலியல் தொல்லை அளித்த மாணவன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். பின்னர், முதல்வர் பாலசுப்பிரமணியன் கூறுகையில், ``தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் பயிலும் மருத்துவ மாணவர் மீது விசாகா கமிட்டியில், மாணவி ஒருவர் கொடுத்த பாலியல் புகாரின் அடிப்படையில் விசாரணை செய்த, விசாகா கமிட்டி குழு அறிவுரையின்படி சம்பந்தப்பட்ட மாணவர் ஒரு மாத காலம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மேல் நடவடிக்கைக்கு மருத்துவ கல்வி இயக்குநருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது” என்றார்.

இதே போல், கடந்த வருடம் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மயக்கவியல் துறை பேராசிரியர் ஒருவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர் விசாகா கமிட்டிக்கு புகார் அனுப்பினார். அப்போது பெண் பயிற்சி மருத்துவர்களுக்கு அளிக்கப்படும் பாலியல் தொல்லை குறித்து புகார் தெரிவித்தால், படிப்பு, செய்முறை தேர்வில் கை வைப்பதாக குற்றச்சாட்டு கிளம்பியது. இந்த நிலையில் அந்த மருத்துவரை காப்பாற்றவே பலரும் முனைப்பு காட்டினர் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அதன் பிறகு விசாகா கமிட்டி விசாரித்து அவர் மீது நடவடிக்கை எடுத்ததா, அந்த விவகாரம் என்ன ஆனது என்பது குறித்து எந்த செய்தியும் வெளிவரவில்லை எனவும் மாணவர்கள் வேதனை தெரிவிக்கிறார்கள்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.