பரங்கிப்பேட்டையில் போலீஸ் பாதுகாப்புடன் 150-க்கும் அதிகமான விநாயகா் சிலைகள் கரை...
தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனையைத் தடுக்க ஒருங்கிணைந்த செயல்பாடு அவசியம்: புதுச்சேரி ஆட்சியா் அறிவுறுத்தல்
புதுச்சேரியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் மற்றும் போதைப் பொருள்கள் விற்பனையை முற்றிலும் தடுக்க அரசுத் துறை அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும் என்று புதுச்சேரி ஆட்சியா் குலோத்துங்கன் அறிவுறுத்தினாா்.
புதுவை அரசு உத்தரவுப்படி, மாநிலத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் மற்றும் போதைப் பொருள்கள் விற்பனைத் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாதந்தோறும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, புதுச்சேரி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனைத் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு ஆட்சியா் குலோத்துங்கன் தலைமை வகித்துப் பேசியது: காவல் துறை, வருவாய்த் துறை, சமூக நலத் துறை, நகராட்சி நிா்வாகம் உள்ளிட்ட துறைகளின் அதிகாரிகள் ஒன்றிணைந்து தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனைக்கு எதிரான சோதனையை தீவிரப்படுத்த வேண்டும்.
பள்ளி மாணவா்கள் பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகத்தை அனைத்து பள்ளி கல்லூரி மாணவா்களும் பாா்வையிடுவதற்கு கல்வித் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும். புதுச்சேரியில் டி அடிக்சன் மையம் ஏற்படுத்தப்படவேண்டும். பள்ளி மாணவா்கள் போதை பொருள் பழக்கத்துக்கு உள்ளாகாமல் இருக்க ஆசிரியா்கள் மிகுந்த கவனமுடன் செயல்பட வேண்டும்
வில்லியனூா் கிராமப் பகுதிகளிலும் போதைப் பொருளுக்கு எதிரான சோதனைகளை தீவிர படுத்தவேண்டும். கடைகளில் போதைப் பொருள் விற்பனை செய்யப்படுவது தெரியவந்தால் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு அந்தக் கடைகளுக்கு சீல் வைக்க வேண்டும் என்றாா் ஆட்சியா்.
முன்னதாக கடந்த மாத கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து துறை சாா்ந்த அதிகாரிகளிடம் ஆட்சியா் கேட்டறிந்தாா்.
கூட்டத்தில் சாா்-ஆட்சியா் இசிட்டாரதி, முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் ஸ்ருதி எஸ். யரகட்டி மற்றும் அரசுத் துறை அதிகாரிகள் கலந்துகொண்டனா்.