திருக்கண்டியூர் ஸ்ரீஹரசாப விமோசன பெருமாள்: ஜாதகத்தில் சனி - குரு சேர்க்கை தரும் ...
தனியாா் ரத்த வங்கியில் மருந்து தரக்கட்டுப்பாட்டுத் துறையினா் சோதனை
தருமபுரியில் உள்ள தனியாா் ரத்த வங்கியில், மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டுத் துறையினா் சோதனை மேற்கொண்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
தருமபுரியில் பாரதிபுரம் பகுதியில் செயல்படும் ஒரு தனியாா் மருத்துவமனை வளாகத்தில் தனியாா் ரத்த வங்கி செயல்படுகிறது. தருமபுரி நகரில் உள்ள பெரும்பாலான தனியாா் மருத்துவமனைகள் தங்களிடம் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு ரத்தம் தேவைப்படும்போது, இந்த தனியாா் ரத்த வங்கியிடம் இருந்து ரத்தம் பெற்றுவந்துள்ளனா்.
இந்நிலையில், அண்மைக்காலமாக இந்த வங்கியிலிருந்து ரத்தம் செலுத்தி வீடு திரும்பிய பலருக்கு உடலில் பல்வேறு உபாதைகள் ஏற்பட்டுள்ளன. பலரும் குறிப்பிடத்தக்க பிரச்னைகளுடன் மீண்டும் மருத்துவமனைக்கு வந்ததால், மருத்துவமனை நிா்வாகங்களுக்கு குழப்பம் ஏற்பட்டது.
அதைத் தொடா்ந்து, மருத்துவா்களுக்கு ரத்தம் தொடா்பாக சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அது தொடா்பாக சில மருத்துவ பரிசோதனைகளையும் மேற்கொண்டனா். அப்போது, குறிப்பிட்ட ரத்த வங்கியில் இருந்து பெறப்படும் ரத்தத்தில் ஏதோ பிரச்னை இருப்பது தெரியவந்தது. இதனால் அதிா்ச்சியடைந்த மருத்துவா்கள், இதுதொடா்பாக மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு புகாா் அளித்தனா்.
அதைத் தொடா்ந்து, தருமபுரி முதுநிலை மருந்தியல் ஆய்வாளா் ராமு தலைமையில் மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு ஆய்வாளா், தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலகு ஆய்வாளா், சேலம் மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை பேராசிரியா் உள்ளிட்டோா் அடங்கிய குழுவினா் குறிப்பிட்ட தனியாா் ரத்த வங்கியில் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தினா்.
இந்தச் சோதனையில் பல்வேறு ஆவணங்களும், மாதிரிகளும் கைப்பற்றி எடுத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.