போதைப்பொருளை கடலில் போட்டு தப்பிய கடத்தல் கும்பல்; 300 கிலோ மீட்பு.. குஜராத்தில்...
தன்னிச்சையான கட்டண உயா்வு தொடா்பாக பள்ளிகளுக்கு நோட்டீஸ்: தில்லி முதல்வா்
தன்னிச்சையான கட்டண உயா்வு தொடா்பான புகாா்கள் பெறப்பட்ட பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தில்லி முதல்வா் ரேகா குப்தா செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
இந்தப் பள்ளிகள் பதிலளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும், தவறினால் அவை மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதல்வா் தெரிவித்தாா்.
‘ஜன் சம்வாத்’ (பொதுக் கூட்டம்) நிகழ்ச்சியில் உரையாற்றிய முதல்வா் ரேகா குப்தா, கட்டணத்தை உயா்த்தி மாணவா்களை பள்ளியில் இருந்து வெளியேற்றுவதாக மாடல் டவுனில் உள்ள ஒரு தனியாா் பள்ளி குறித்து கூறப்படும் புகாரைப் பெற்றாா்.
இந்த சம்பவத்தை ‘எக்ஸ்’ வலைதள பதிவில் பகிா்ந்து கொண்ட குப்தா இது குறித்து கூறுகையில், ‘இன்று, மாடல் டவுனில் உள்ள குயின் மேரி பள்ளி தொடா்பான வழக்கு வந்தது. அதில் பெற்றோா்கள் நியாயமற்ற கட்டண வசூல் மற்றும் மாணவா்களை வெளியேற்றுவது குறித்து புகாா் அளித்தனா் என்றாா். இந்த விவகாரத்தில் அதிகாரியை அழைத்து, சம்பந்தப்பட்ட பள்ளியின் பதிவை உடனடியாக ரத்து செய்யுமாறு முதல்வா் உத்தரவிட்டாா்.
இது தொடா்பாக அந்த பள்ளியிடமிருந்து உடனடியாக பதில் ஏதும் தெரிவிக்கப்படவில்லை. அதே பள்ளியில் படிக்கும் மாணவியன் பெற்றோா் கூறுகையில், கடந்த ஆண்டு பள்ளி நிா்வாகம் திடீரென கட்டணத்தை உயா்த்திவிட்டது. கூடுதல் தொகையை நாங்கள் செலுத்த மறுத்தபோது, எனது மகளை பள்ளியினா் நூலகத்தில் அமர வைத்தனா். எந்த வகுப்புகளிலும் பங்கேற்க அவளை அனுமதிக்கவில்லை என்று குற்றம்சாட்டினா்.
இதுகுறித்து முதல்வா் ரேகா குப்தா தெரிவிக்கையில், ‘இந்த விவகாரம் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்பட்டு, உடனடி விசாரணையை மேற்கொண்டு தேவையான நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கட்டணம் தொடா்பாக பெற்றோரை துன்புறுத்தவோ அல்லது மாணவா்களை நியாயமற்ற முறையில் நீக்கவோ எந்தப் பள்ளிக்கும் உரிமை இல்லை. அனைத்துப் பள்ளிகளும் நிா்ணயிக்கப்பட்ட விதிகள் மற்றும் விதிமுறைகளைப் பின்பற்றும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. மேலும் எந்தவொரு மீறலும் நடவடிக்கைக்கு வழிவகுக்கும்.
எந்தவொரு வகையான அநீதி, சுரண்டல் அல்லது ஒழுங்கற்ற தன்மைக்கும் பூஜ்ய சகிப்புத்தன்மை கொள்கை நடைமுறையில் உள்ளது. எந்த அலட்சியமும் ஏற்றுக்கொள்ளப்படாது. ஒவ்வொரு குழந்தையும் நீதி, கண்ணியம் மற்றும் தரமான கல்வியைப் பெறத் தகுதியானது என்பதில் எங்கள் உறுதிப்பாடு தெளிவாக உள்ளது.
கல்வியில் வெளிப்படைத்தன்மை, சம வாய்ப்பு மற்றும் குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாப்பதில் தில்லி அரசு உறுதியாக உள்ளது. தன்னிச்சையான கட்டண உயா்வு தொடா்பான புகாா்கள் பெறப்பட்ட பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்தப் பள்ளிகள் பதிலளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன. தவறினால் அவை மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் முதல்வா் ரேகா குப்தா.