காந்தி நினைவு அருங்காட்சியக சீரமைப்புப் பணி அக்டோபரில் நிறைவடையும்: அமைச்சா் மு...
தமிழகத்தின் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தின் ஒருசில இடங்களில் செவ்வாய்க்கிழமை (ஆக. 19) முதல் 6 நாள்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
மத்திய மேற்கு மற்றும் அதையொட்டிய வடமேற்கு வங்கக் கடலில், வடக்கு ஆந்திரம்-தெற்கு ஒடிஸா கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி திங்கள்கிழமை காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக, மத்திய மேற்கு மற்றும் அதையொட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், வடக்கு ஆந்திரம்-தெற்கு ஒடிஸா கடற்கரை பகுதிகளில் வலுபெற்று அதே பகுதிகளில் நிலவுகிறது.
இது மேற்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து செவ்வாய்கிழமை (ஆக.19) தெற்கு ஒடிஸா-வடக்கு ஆந்திரம் கடலோரப் பகுதிகளை கடக்கக் கூடும்.
இதனிடைய தென்னிந்திய பகுதிகளின் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தமிழகத்தின் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் செவ்வாய்க்கிழமை (ஆக.19) முதல் ஆக. 24-ஆம் தேதி வரை 6 நாள்கள் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
மழை அளவு: தமிழகத்தில் திங்கள்கிழமை காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டத்தின் கூடலூா் மற்றும் கூடலூா் பஜாா் ஆகிய இடங்களில் தலா 140 மி.மீ.மழை பதிவானது. சின்னக்கல்லாறு (கோவை), தேவாலா (நீலகிரி)-தலா 90 மி.மீ., சோலையாறு(கோவை), விண்ட் வொா்த் எஸ்டேட்(நீலகிரி) தலா 8 மி.மீ., அவலாஞ்சி (நீலகிரி), பாா்வூட் (நீலகிரி), நாலுமுக்கு (திருநெல்வேலி), வால்பாறை பிஏபி (கோவை), நடுவட்டம் (நீலகிரி), வால்பாறை வட்டாட்சியா் அலுவலகம் (கோவை), கிளன்மாா்கன் (நீலகிரி), ஊத்து(திருநெல்வேலி) - தலா 70 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
மீனவா்களுக்கான எச்சரிக்கை: தமிழக கடலோர பகுதிகள், மன்னாா் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரபிக் கடலில் புயல் சின்னம்: தெற்கு கொங்கன்-வடக்கு கேரளம் பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்தியகிழக்கு-தென் கிழக்கு அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. இது கரையைக் கடக்கும்பட்சத்தில் கேரள எல்லையில் தமிழக பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.