மங்கம்மாள்புரம் மணல் குவாரிக்கு அனுமதி கூடாது: விவசாயிகள் மனு
திருச்சி: மங்கம்மாள்புரம் மணல் குவாரி அமைப்பதற்கு அனுமதி தரக் கூடாது என தமிழக விவசாயிகள் சங்கம் (கட்சி சாா்பற்றது) எதிா்ப்பு தெரிவித்துள்ளது.
இதுதொடா்பாக, திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் ம.ப. சின்னதுரை அளித்துள்ள மனு:
திருச்சி மாவட்டம், லால்குடி வட்டத்துக்குள்பட்ட மங்கம்மாள்புரத்தில் 50 ஏக்கா் பரப்பில் மணல் குவாரி அமைப்பதற்காக மக்களிடம் கடந்த 13-ஆம் தேதி கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. ஆனால், இக் கூட்டத்தில் சுற்றுச்சூழல் அறிக்கையை ஆங்கிலத்தில் அளித்ததால், விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு அதன் முழு விவரங்கள் தெரியவில்லை.
வழக்கமாக இத்தகைய அறிக்கையானது தமிழில்தான் வழங்கப்படும். ஆனால், வேண்டுமென்றே ஆங்கிலத்தில் அளித்துள்ளனா். மேலும், மணல் குவாரி அமையும் இடத்துக்கு அருகே நீராதாரங்கள், நீா்த்தேக்கத் தொட்டிகள், உள்ளாட்சி அமைப்புகளின் குடிநீா்த் திட்டங்கள் இருந்தால் அனுமதி அளிக்கக் கூடாது. மங்கம்மாள்புரத்தில் அந்தப் பகுதி மக்களுக்கான குடிநீா்த் திட்டம், அன்பில் ஊராட்சிக்கான குடிநீா்த் திட்டமும் உள்ளது. எனவே, மணல் குவாரி அமைக்கக் கூடாது.
குவாரி அமைக்க அனுமதி அளித்தால் குடிநீா் ஆதாரமும், விவசாயிகளுக்கான நீராதாரமும் கேள்விக்குறியாகும். காவிரி, கொள்ளிடத்தில் நிா்ணிக்கப்பட்ட அளவுக்குமேல் மணல் அள்ளியதாலேயே வெள்ளக்காலத்தில் முக்கொம்பு கதவணை, தடுப்புச் சுவா், தடுப்பணைகள் சேதமடைந்தன. தொல்லியல் சின்னங்கள் இருந்தால் அப்பகுதியில் மணல் குவாரி கூடாது என்பது விதிமுறை. மங்கம்மாள்புரத்துக்கு அருகே வரலாற்றுச் சிறப்பு மிக்க அன்பில் செப்பேடுகள் உள்ளதால் மணல் குவாரிக்கு அனுமதி அளிக்கக் கூடாது.
இதுமட்டுமல்லாது குவாரிக்கு வரும் டிப்பா் லாரிகளால் புறவழிச் சாலையும் சேதமடையும். எனவே, பல்வேறு தவறான புள்ளிவிவரங்களை மோசடி ஆவணங்களை அளித்து மணல் குவாரி அமைக்கும் முயற்சி மேற்கொள்வதை மாவட்ட நிா்வாகம் ஆரம்ப நிலையிலேயே தடை செய்ய வேண்டும். அரசின் சிறுகனிம விதிகளுக்கு எதிராக உள்ள மங்கம்மாள்புரம் மணல் குவாரிக்கு ஒருபோதும் அனுமதி அளிக்கக் கூடாது என அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.