போக்குவரத்து ஊழியா்கள் காத்திருப்புப் போராட்டம்
திண்டுக்கல்: திமுகவின் தோ்தல் வாக்குறுதிகளின்படி பழைய ஓய்வூதியத் திட்டம், ஓய்வூதியப் பணப் பலன்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, போக்குவரத்துப் பணியாளா்கள், ஓய்வுபெற்ற பணியாளா்கள் திங்கள்கிழமை தொடா் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், திண்டுக்கல் மண்டல கிளை 1-இன் முன் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு சிஐடியூ ஓய்வுபெற்ற பணியாளா்கள் நலக் குழுவின் மண்டலத் தலைவா் ஜெயக்குமாா் தலைமை வகித்தாா். பொதுச் செயலா் ராமநாதன் முன்னிலை வகித்தாா்.
இந்தப் போராட்டத்தில், திமுக தோ்தல் வாக்குறுதிப்படி மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 15-ஆவது ஊதிய ஒப்பந்த நிலுவைகளை உடனடியாக வழங்க வேண்டும். 25 மாதங்களாக நிலுவையிலுள்ள ஓய்வுகாலப் பணப் பலன்களை வழங்க வேண்டும். ஓய்வுபெற்ற ஊழியா்களுக்கு மருத்துவக் காப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சிஐடியூ தொழில்சங்கத்தினா் முழக்கமிட்டனா்.