டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து ரூ.87.73 ஆக நிறைவு!
தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி 11.19% எட்டியுள்ளது: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா
மத்திய அரசின் தரவுகள் வாயிலாகத் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 11.19 சதவீதத்தை எட்டியிருப்பதைத் தெரியவந்திருப்பதாகத் தமிழக தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.
மன்னார்குடியில்,புதன்கிழமை அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசியது,
இந்தியாவிலேயே மிக அதிகமாக அற்புதமான வேகத்தில் வளரக்கூடிய பொருளாதார வளர்ச்சியில் இன்று தமிழகம் இருந்து வருகிறது. தமிழகம் கடந்த 14 ஆண்டுகளாக ஒன்றை இலக்க அடிப்படையில் தான் பொருளாதார வளர்ச்சி இருந்து வந்துள்ளது. கடந்தாண்டு வரை 9 சதவீதம் என்ற கணக்கீட்டில் தான் இருந்துள்ளது.
தமிழகத்தில் கருணாநிதி முதல்வராக இருந்த திமுக ஆட்சியில்தான் முன்பு இரட்டை இலக்க எண்ணில் பொருளாதார வளர்ச்சி உயர்ந்திருந்தது. 2021 சட்டப்பேரவைத் தேர்தல் பரப்புரையின் போது முதல்வர் ஸ்டாலின், மீண்டும் தமிழகத்தில் திமுக ஆட்சி வந்தால் 10 ஆண்டுகளில் இரட்டை இலக்க எண்ணில் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியடைய பணியாற்றுவோம் என்றார். ஆனால், இன்று திமுக ஆட்சி அமைந்து 4 ஆண்டுகளில் இரட்டை இலக்கத்தில் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி அடைந்துள்ளது. மத்திய அரசு செவ்வாய்க்கிழமை வெளியிடுள்ள தரவுகளின் அடிப்படையில் தமிழகம் தற்போது பொருளாதார வளர்ச்சியில் 11.19 சதவீதத்தை எட்டியிருப்பது முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி, நிதிஅமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோரின் தொடர் உழைப்பால் சாத்தியமாகி உள்ளது. இதன் மூலம் தமிழகம் முதன்மை மாநிலமாகத் திகழ்கிறது. அதற்கு இந்த நேரத்தில் அவர்களுக்கு நன்றியினை தமிழக மக்கள் தெரிவித்துக் கொள்கிறார்கள்.
இதனைத் தொடர்ந்து, தனிநபர் வருமானமும் வளர்ச்சி இன்னும் பன்மடங்கு உயரும். மாநிலத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதிக்கான வளர்ச்சியாக இல்லாமல் மாநில முழுவதுக்குமான பரவலாக்கப்பட்ட வளர்ச்சிக்காகக் கிடைத்த வெற்றிதான் மத்திய அரசின் தரவுகள் வாயிலாக நாம் அறிய முடிகிறது. இதன்வாயிலாக விரைவான பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தொழில்துறை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என பாஜக தலைவர் எல்.முருகன், அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் கூறுவது, தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியில் மத்திய அரசின் தரவுகள் மூலம் திராவிட மாடல் ஆட்சிக்குக் கிடைத்துள்ள வெற்றியின் வயிற்றெரிச்சல் காரணமாக இருக்கலாம் என்றார்.