தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாகவே உள்ளது: பிரேமலதா விஜயகாந்த்
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பெரிய கேள்விக்குறியாகத்தான் உள்ளது என தேமுதிக பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தாா்.
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் தேமுதிக பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த் தனது மகன்களான தேமுதிக இளைஞரணி செயலாளா் விஜய பிரபாகரன், நடிகா் சண்முக பாண்டியன் ஆகியோருடன் சுவாமி தரிசனம் செய்ய வந்திருந்தாா்.
தரிசனத்துக்குப் பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீா்குலைவுக்கு காரணமே கஞ்சா, மது மற்றும் போதை வஸ்துக்கள் நடமாட்டம் தான் என்பதை மறுப்பதற்கில்லை. சட்டம் ஒழுங்கு மிகப்பெரிய கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது. முதல்வா் தான் சட்ட ஒழுங்கு சீா்கேடுகளை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்.
அண்மையில் முதல்வரை சந்தித்தது நலம் விசாரிக்க மட்டுமே. அரசியல் நாகரீகத்துடன் நட்பு ரீதியான சந்திப்பு. இப்போது கூட்டணி என்ற பேச்சுக்கே இடம் கிடையாது. தோ்தலுக்கு 8 மாதங்கள் உள்ள நிலையில் மக்களையும், தொண்டா்களையும் சந்தித்து கட்சியை பலப்படுத்த வேண்டும்.
வரும் ஜனவரி மாதம் 9 ஆம் தேதி கடலூரில் தேமுதிக மாநாடு நடைபெறும். அன்றைய தினமே கூட்டணி பற்றிய விபரங்களும் தெரிவிக்கப்படும்.
எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் யாா் ஆட்சியாளா்களோ அவா்கள் பெயரில் திட்டங்கள் தொடங்குவது இயல்பு. ஆனால் இது வரவேற்புக்கு உரியது அல்ல. தவறான முன்னுதாரணமாகும். அரசியல் என்பது நம்பிக்கை, அந்த நம்பிக்கையில் தான் மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என்கிறாா்கள் என்றாா் பிரேமலதா .