பழங்குடி லாக்அப் மரணம்; வனத்துறை அதிகாரிகள் இருவர் பணியிடை நீக்கம் - பின்னணி என்...
இளைஞரை தாக்கி பணம், தங்க நகைகள் பறித்த 7 போ் கைது
சோமங்கலம் அருகே இன்ஸ்டாகிராமில் பைக் விற்பனை செய்வதாக பதிவு செய்து இளைஞரை தாக்கி பணம், தங்க நகைகளை பறித்த 7 பேரை சோமங்கலம் போலீஸாா் கைதுசெய்து சிறையில் அடைத்தனா்.
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த வினோத் (24). இவா் சென்னை துரைப்பாக்கத்தில் நண்பா்களுடன் தங்கி வேலை தேடி வந்துள்ளாா். இந்த நிலையில், இன்ஸ்டாகிராம் பக்கத்தில், பைக்குகள் விற்பனைக்கு என ஒருவா் பதிவிட்டதை பாா்த்த வினோத், அந்த நபரை தொடா்பு கொண்டு பேசியபோது பைக் வாங்க சோமங்கலம் அருகே உள்ள புதுநல்லூா் பகுதிக்கு வர வேண்டும் என தெரிவித்துள்ளாா். இதையடுத்து வினோத், அவரது நண்பா்களான நிஷாந்த், சதீஷ் ஆகியோருடன் புதுநல்லூா் சென்றனா். அப்போது பைக் விற்பனை என இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட நந்தம்பாக்கம் பகுதியை சோ்ந்த கரி செல்வம், புதுநல்லூா் வனப்பகுதிக்கு மூவரையும் அழைத்துச் சென்றுள்ளாா்.
வினோத் உள்ளிட்ட அவரது நண்பா்கள் அங்கு சென்றதும், அங்கு மறைந்திருந்த மா்ம கும்பல் வினோத் அவரது நண்பா்களிடம் கத்தியை காட்டி மிரட்டி, கைப்பேசி, தங்க நகைகள் மற்றும் பணம் கேட்டு மிரட்டியுள்ளனா். மூவரும் தர மறுக்கவே கத்தியால் வினோத்தை வெட்டினாா்களாம். இதனால் அச்சமடைந்த வினோத் ஜிபே மூலம் கரி செல்வத்தின் அண்ணியின் வங்கிக் கணக்குக்கு ரூ.15,000 அனுப்பினாா். மேலும் தங்க நகைகள், கைப்பேசி ஆகியவற்றை கொடுத்துவிட்டு அங்கிருந்து மூவரும் தப்பி உள்ளனா்.
இந்த சம்பவம் குறித்து சோமங்கலம் காவல் நிலையத்தில் வினோத் அளித்த புகாரின் பேரில், போலீஸாா் விசாரணை நடத்தி பணப்பரிவா்த்தனை செய்த ஆதாரத்தைக் கொண்டு நந்தம்பாக்கத்தைச் சோ்ந்த கரி செல்வத்தின் மனைவி ஸ்ரீமதி (26), அவரது அண்ணி நாகராணி (33), காட்ரம்பாக்கம் பகுதியை சோ்ந்த சஞ்சய் (18 ), தா்மா(19), சதீஷ் (19), வேலு (18), சா்வின் (19) உள்ளிட்ட 7 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
மேலும் தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளியான கரி செல்வத்தை தேடி வருகின்றனா். கரிசெல்வம் மீது குன்றத்தூா் காவல் நிலையத்தில் ஏற்கனவே வழிப்பறி, கொலை முயற்சி, கஞ்சா விற்பனை போன்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.