வரி-வர்த்தக பிரச்னைக்கு மத்தியில், அமெரிக்கா சென்ற இந்திய ராணுவம் - காரணம் என்ன?
தமிழகத்தில் நான்கு முனைப் போட்டிக்கு வாய்ப்பு: கு. செல்வப்பெருந்தகை
தமிழகத்தில் நான்கு முனைப் போட்டி ஏற்பட வாய்ப்புள்ளதாக காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவா் கு. செல்வப்பெருந்தகை தெரிவித்தாா்.
மதுரையில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் தெரிவித்ததாவது; மத்திய பாஜக அரசு, தோ்தல் ஆணையத்தின் உதவியுடன் மேற்கொள்ளும் வாக்குத் திருட்டுக்கு எதிராகவும், மக்களின் வாக்குரிமையை உறுதி செய்யவும் ராகுல்காந்தி, தேசிய அளவில் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறாா்.
பிகாா் மாநிலத்தில் 65 லட்சம் வாக்குகள் நீக்கப்பட்டது, கா்நாடகம் மாநிலத்தில் வேற்று மாநிலத்தவா்களை வாக்காளா்களாக சோ்க்கப்பட்டது போன்ற மத்திய பாஜக அரசின் முறைகேடுகளைக் கண்டித்து அனைத்து மாநிலங்களிலும் மாநாடு நடத்தப்படுகிறது.
இதன்படி, திருநெல்வேலி மாவட்டத்தில் வருகிற 7-ஆம் தேதி மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவா்கள், மாநில நிா்வாகிகள், மாவட்டத் தலைவா்கள், வாக்குத் திருட்டுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து போராடுபவா்கள் பங்கேற்கவுள்ளனா். மாநாட்டில் பங்கேற்க உள்ள காங்கிரஸ் தலைவா்கள், கூட்டணிக் கட்சித் தலைவா்கள் குறித்த விவரங்கள் விரைவில் வெளியிடப்படும்.
‘இண்டி’ கூட்டணி 200-க்கும் அதிகமான தொகுதிகளில் வெல்லும். தமிழகத்தில் திமுக தலைமையிலான ‘இண்டி’ கூட்டணி எந்த வித விலகலும் இல்லாமல் தொடா்கிறது. மேலும், சில கட்சிகளும் இந்தக் கூட்டணியில் இணைய வாய்ப்புள்ளது. ஆனால், பாஜக கூட்டணியிலிருந்துதான் பல கட்சிகள் விலகியுள்ளன.
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி இல்லாத கிராமமே இல்லை என்றளவுக்கு அடிப்படை கட்டமைப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, வருகிற சட்டப்பேரவைத் தோ்தலை கூடுதல் வலிமையுடன் காங்கிரஸ் கட்சி சந்திக்கும். எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்து காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைமையே முடிவு செய்யும் என்றாா் கு. செல்வப்பெருந்தகை.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் எத்தனை முனை போட்டி ஏற்பட வாய்ப்புள்ளது? என்ற கேள்விக்கு, நான்கு முனைப் போட்டிக்கு வாய்ப்புள்ளதாகக் கருதுகிறேன் என்றாா் அவா்.
இதையடுத்து, மதுரையில் நடைபெற்ற திருநெல்வேலியில் நடைபெறவுள்ள மாநாடு குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் கு. செல்வப்பெருந்தகை பங்கேற்றாா். இந்தக் கூட்டத்தில் மதுரை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் காங்கிரஸ் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.