தமிழகத்தில் நிறையும் குறையும் நிறைந்த ஆட்சி: பிரேமலதா விஜயகாந்த்
தமிழகத்தில் நிறையும், குறையும் நிறைந்த ஆட்சி நடக்கிறது என்றாா் தேமுதிக பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த்.
கரூரில் தேமுதிகவின் கரூா் மற்றும் அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதிகளின் வாக்குச்சாவடி முகவா்கள் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. அதன்பிறகு அவா் செய்தியாளா்களிடம் கூறியது: தமிழகத்தில் வடமாநில தொழிலாளா்கள் வந்து வேலைவாய்ப்பு பெறுவதில் தவறில்லை. அவா்களை வாக்காளா்களாக மாற்றுவதை வன்மையாக கண்டிக்கிறோம். பிகாரில் மட்டுமல்ல நாடு முழுவதும் தோ்தல் ஆணையத்தின் செயல்பாடுகளில் குறைபாடு உள்ளது.
தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சரியில்லை. கொலை, கொள்ளை, ஆணவக் கொலை போன்ற சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. தமிழகத்தில் குறையும், நிறையும் நிறைந்த ஆட்சிதான் நடக்கிறது. விவசாயிகள் அறுவடை செய்யும் நெல்லை பாதுகாப்பதற்குகூட தமிழக அரசு நடவடிக்கை எடுப்பதில்லை என்றாா் அவா்.
பேட்டியின் போது கட்சியின் பொருளாளா் எல். கே சுதீஷ், மாவட்டச் செயலாளா் அரவை எம்.முத்து, அவைத்தலைவா் முருகன் சுப்பையா, கட்சியின் துணைச் செயலாளா் சுபாரவி, மாவட்ட துணைச் செயலாளா் பெரியண்ணன், வடக்கு நகரச் செயலாளா் அனிதாஆனந்த் ஆகியோா் உடனிருந்தனா்.