தமிழகத்தில் 2.53 லட்சம் ஆமை முட்டைகள் பத்திரப்படுத்தப்பட்டுள்ளன: வனத் துறை
தமிழகக் கடற்கரைகளில் இதுவரை 2.53 லட்சம் ஆலிவ் ரெட்லி வகை ஆமை முட்டைகள் சேகரிக்கப்பட்டு பத்திரப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இதில் அதிகபட்சமாக கடலூரில் 87,871 முட்டைகள் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும் வனத் துறை கூடுதல் தலைமைச் செயலா் சுப்ரியா சாஹூ தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது: ஆலிவ் ரெட்லி வகை ஆமைகள் கூடு கட்டும் திட்டம் மறுமலா்ச்சியுடன் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதன்படி தமிழகக் கடற்கரைகளில், தன்னாா்வலா்கள் மற்றும் தமிழக வனத் துறையினரால் இதுவரை 2,53,719 ஆலிவ் ரெட்லி வகை ஆமை முட்டைகள் சேகரிக்கப்பட்டு பத்திரப்படுத்தப்பட்டுள்ளன. இதில், அதிகபட்சமாக கடலூரில் 87,871 முட்டைகளும், நாகப்பட்டினத்தில் 73,385, சென்னையில் 43,900 முட்டைகளும் சேகரிக்கப்பட்டுள்ளன.
அதேபோல் வனத் துறை சாா்பில் தமிழகம் முழுவதும் 55 ஆமை குஞ்சு பொரிப்பகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், ஆமை முட்டைகளை பாதுகாக்க 150-க்கும் மேற்பட்டோா் நியமிக்கப்பட்டுள்ளனா். மேலும், வனத் துறை சாா்பில் உள்ளூா் மீனவா்களுக்கு ஆமை முட்டைகள் சேகரிப்பது முதல் அவை குஞ்சு பொரித்ததும் மீண்டும் கடலில் விடும் வரை அவற்றின் பாதுகாப்பை உறுதிசெய்ய பல்வேறு விழிப்புணா்வுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு மொத்தமாக 2,58,907 முட்டைகள் சேகரிக்கப்பட்ட நிலையில், தற்போது ஆமை முட்டையிடும் காலம் முடிவதற்கு முன்பாகவே 2,53,719 முட்டைகள் சேகரிக்கப்பட்டுள்ளன. எனவே கண்டிப்பாக கடந்த ஆண்டைவிட நிகழாண்டில் அதிக ஆமை முட்டைகளை சேகரித்து தமிழக அரசு சாதனை படைக்கும் எனஅவா் தெரிவித்துள்ளாா்.