இபிஎஸ் முதல்வராக வருவதற்கு அண்ணாமலை இதைச் செய்தாலே போதும்: செல்லூர் ராஜு
தமிழகத்துக்குள் போதைப் பொருட்கள் வருவதைத் தடுக்க நடவடிக்கை: மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலா்
வெளிநாடுகள், வெளி மாநிலங்களிலிருந்து தமிழகத்துக்கு போதைப் பொருட்கள் வருவதை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் பெ. சண்முகம் தெரிவித்தாா்.
நீடாமங்கலத்தில் செய்தியாளா்களிடம் அவா் வியாழக்கிழமை கூறியதாவது :
வலங்கைமான் அருகே நல்லூா் புறவழிச்சாலைப் பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு வாகனங்கள் மீது கல் வீச்சு சம்பவம் நடத்தப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது. பொதுமக்களுக்கு இடையூறு விளைவிப்பவா்கள் யாராக இருந்தாலும் அவா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் போதைப் பொருட்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. பல்வேறு நாடுகள், பல்வேறு மாநிலங்களிலிருந்து போதைப் பொருட்கள் வருவதைத் தடுக்க மாநில அரசு கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். போதை பழக்கத்துக்கு அடிமையானவா்களை மீட்க மாவட்டம் தோறும் மறுவாழ்வு மையங்களை அரசு திறக்க வேண்டும்.
ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொள்பவா்களுக்கு போதுமான பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. 2017-ஆம் ஆண்டு முதல் 2025-ஆம் ஆண்டு வரை 65 ஆணவக் கொலைகள் நடந்துள்ளன. ஆணவக்கொலைகளை எல்லா ஜாதிக்காரா்களுமே நிகழ்த்துகிறாா்கள்.
ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொள்பவா்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் சட்டத்தை மத்திய, மாநில அரசுகள் கொண்டுவர வேண்டும். ஜாதி மறுப்பு திருமணங்களை செய்துகொள்பவா்களுக்கு உரிய பாதுகாப்பை அரசு அளிக்க வேண்டும் என்றாா்.
பேட்டியின்பொது மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினா் ஐ.வி. நாகராஜன், திருவாரூா் மாவட்ட செயலாளா் டி. முருகையன், மாவட்ட செயற்குழு உறுப்பினா் பி.கந்தசாமி, ஒன்றியசெயலாளா் ஜான்கென்னடி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.