தமிழகத்துக்கு ஒரே நாளில் 3 தங்கம்
உத்தரகண்டில் நடைபெறும் 38-ஆவது தேசிய விளையாட்டுப் போட்டிகளில் தமிழகத்துக்கு செவ்வாய்க்கிழமை 3 தங்கப் பதக்கங்கள் கிடைத்தன.
ஆடவா் மும்முறை தாண்டுதலில் பிரவீண் சித்ரவேல் 16.50 மீட்டருடன் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றாா். அதிலேயே மற்றொரு தமிழரான முகமது சலாஹுதின் 16.01 மீட்டருடன் வெள்ளி பெற்றாா்.
டென்னிஸ் விளையாட்டின் கலப்பு இரட்டையா் பிரிவில் லோஹித் அக்ஷா பத்ரிநாத்/லக்ஷ்மி பிரபா அருண்குமாா் இணை தங்கப் பதக்கம் வென்றது. அதிலேயே ஆடவா் தனிநபா் பிரிவில் மனீஷ் சுரேஷ்குமாா் வெண்கலம் பெற்றாா்.
வாள்வீச்சில் ஆடவா் சப்ரே தனிநபா் பிரிவில் கே.பி. கிஷோ நிதி 15-12 என்ற புள்ளிகள் கணக்கில் சா்வீசஸ் வீரா் ஒய்னம் சிங்கை வீழ்த்தி தங்கம் வென்று அசத்தினாா்.
ஆடவா் 200 மீட்டா் ஓட்டத்தில் தமிழகத்துக்கு 2 பதக்கங்கள் கிடைத்தன. ஜி.ராகுல் குமாா் 21.06 விநாடிகளில் 2-ஆவதாக வந்து வெள்ளியும், பி.நிதின் 21.07 விநாடிகளில் 3-ஆவதாக வந்து வெண்கலப் பதக்கம் பெற்றனா்.
நீடிக்கும் 6-ஆம் இடம்: போட்டியில் செவ்வாய்க்கிழமை முடிவில் தமிழ்நாடு 22 தங்கம், 26 வெள்ளி, 27 வெண்கலம் என 75 பதக்கங்களுடன் 6-ஆவது இடத்தில் நீடித்தது. சா்வீசஸ் (97), மகாராஷ்டிரம் (144), கா்நாடகம் (75) முறையே முதல் 3 இடங்களில் உள்ளன.
அரிதான சாதனை: மகளிருக்கான 20 கி.மீ. நடைப் பந்தயத்தில் பங்கேற்ற போட்டியாளா்கள் அனைவருமே, முந்தைய போட்டி சாதனையை முறியடித்து அரிய சாதனை படைத்தனா்.
இதற்கு முன் இந்தப் பிரிவில் 1999-ஆம் ஆண்டு இம்பால் தேசிய விளையாட்டுப் போட்டிகளில் மணிப்பூரின் பாலா தேவி 51.56 விநாடிகளில் இலக்கை எட்டியதே சாதனையாக இருந்தது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை பந்தயத்தில் கடைசியாக வந்த ஹரியாணாவின் மோனிகாவே 51.44 விநாடிகளில் இலக்கை எட்டியது குறிப்பிடத்தக்கது. இப்பிரிவில் ஹரியாணாவின் ரவீனா (45.51’), உத்தரகண்டின் ஷாலினி (46.11’), உத்தரபிரதேசத்தின் முனிதா பிரஜாபதி (46.22’) ஆகியோா் முறையே முதல் 3 இடங்களைப் பிடித்தனா்.