தமிழக தலைவர்கள் பலர் தமிழில் கையெழுத்திடுவதில்லை: பிரதமர் மோடி
ராமேசுவரம்: தமிழ்நாடு தலைவர்கள் பலர் எனக்கு கடிதம் அனுப்புகின்றனர், ஆனால் அதில் தமிழில் கையெழுத்திடுவதில்லை என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம்-ராமேசுவரம் தீவுப் பகுதியை இணைக்கும் வகையிலும், கப்பல், ரயில்கள் வந்து செல்லும் வகையிலும் கடந்த 1914-ஆம் ஆண்டு ரயில் பாலம் கட்டப்பட்டு போக்குவரத்து தொடங்கப்பட்டது. நூறு ஆண்டுகள் கடந்த நிலையில், பாம்பன் ரயில் பாலத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
இதைத் தொடா்ந்து, ரூ. 550 கோடியில் புதிய ரயில் பாலம் கட்டும் பணி கடந்த 2019-ஆம் ஆண்டு தொடங்கியது. தற்போது, அனைத்துப் பணிகளும் நிறைவடைந்தன. இதையடுத்து, பாம்பன் புதிய ரயில் பாலத்தை பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்தார்.
பின்னர் கூட்டத்தினரிடையே அவர் பேசியதாவது:
ராமநவமி வாழ்த்துகள்
ராமநவமி நாளான இன்று அயோத்தியில் சூரிய திலகம் தெரிந்தது. இன்று ராம நவமி என்பதால் என்னுடன் சேர்ந்து ஜெய் ஸ்ரீராம் என்று முழங்குங்கள். தமிழ்நாட்டின் சங்க இலக்கியங்களில்கூட ராமர் பற்றி கூறப்பட்டுள்ளது. அனைவருக்கும் ராமநவமி வாழ்த்துகள் எனக் கூறி ஜெய் ஸ்ரீராம் என மூன்று முறை முழங்கினார்.
சுல பயணத்திற்கு உதவியாக இருக்கும்
இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உள்ளிட்டவை புதிய பாம்பன் பாலம் மூலம் கிடைக்கும். எங்கள் ஆட்சியில் பாம்பன் பாலம் திறக்கப்பட்டத்தில் மகிழ்ச்சி.
சுலப வியாபாரம், சுலப பயணத்திற்கு பாம்பன் பாலம் உதவிகரமாக இருக்கும் என்றார்.
சொல்லப் போனால்... நல்லதைச் சொல்வது தப்பா?
12 லட்சம் வீடுகள்
தமிழ்நாட்டில் ஏழை மக்களுக்காக 12 லட்சம் வீடுகள் கட்டுக் கொடுக்கப்பட்டுள்ளன. 10 ஆண்டுகளில் 4 கோடிக்கும் அதிகமானோருக்கு கான்கிரீட் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. ஒரு கோடிக்கும் மேலான குடும்பங்களுக்கு குழாய் வழியே குடிநீர் வழங்கப்பட்டுள்ளது.
மூன்று மடங்கு நிதி கொடுத்துள்ளோம்
கடந்த பத்து ஆண்டுகளில் தமிழகத்தின் வளர்ச்சிக்காக 3 மடங்கி அதிக நிதி கொடுத்துள்ளோம். ரயில்வே திட்டங்களுக்கான நிதியை 7 மடங்கு அதிகமாக வழங்கியுள்ளோம். இந்த ஆண்டு ரூ.6 ஆயிரம் கோடிக்கும் அதிகம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் கட்டமைப்பே மத்திய அரசின் முதன்மை நோக்கம். திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் கூட்டணி அரசை விட தமிழகத்திற்கு அதிக நிதி தந்துள்ளோம். இவற்றையெல்லாம் செய்தும் கூட சிலர் அழுதுகொண்டே இருக்கிறார்கள். அவர்களுக்கு அழுவதற்கு மட்டுமே தெரியும், அழுதுவிட்டு போகட்டும்.
மருத்துவ கல்வியை தமிழில் வழங்க வேண்டும்
மருத்துவ கல்வியை தமிழில் வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைத்த மோடி, மருத்துவ படிப்பை தமிழில் கொண்டுவர வேண்டும் என்பதே எங்களது பெரும் ஆசை என்றார்.
தமிழக தலைவர் பலர் தமிழில் கையெழுத்திடுவதில்லை
தமிழ்நாடு தலைவர்கள் பலர் எனக்கு கடிதம் அனுப்புகின்றனர், ஆனால் அதில் தமிழில் கையெழுத்திடுவதில்லை எனவும், கடிதங்கள் அனைத்தும் ஆங்கிலத்தில் இருக்கும், குறைந்தபட்சம் கையெழுத்தாவது தமிழில் இருக்க வேண்டும் வேண்டும் என பிரதமர் மோடி கூறினார்.