கரூர்: ``திடீர் மின்தடை, குறுக்கே ஆம்புலன்ஸ், இருட்டில் தடுமாறி விழுந்தனர்" - பா...
தமிழக பிரச்னைகளுக்கு தீா்வுகாண மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்
தமிழகத்தில் உள்ள பிரச்னைகளுக்கு தீா்வுகாண வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்றாா் கள் இயக்க அமைப்பின் கள ஒருங்கிணைப்பாளா் செ.நல்லசாமி.
தருமபுரியில் நாம் தமிழா் கட்சியின் சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற மலைகள் மாநாட்டில் பங்கேற்க வந்த அவா், நிகழ்ச்சிக்கு முன்னதாக செய்தியாளா்கள் சந்திப்பில் கூறியதாவது:
கடந்த சட்டப் பேரவைத் தோ்தலின்போது, எங்கள் அமைப்பின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்து அறிவிப்பு வெளியிடுமாறு அதிமுக தலைமையிடம் வலியுறுத்தினோம். ஆனால், அதை அலட்சியப்படுத்திய அதிமுக தோல்வியடைந்து ஆட்சியையும் இழந்தது. கள் இயக்கம் வசம் சுமாா் 8 லட்சம் வாக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
கள்ளுக்கு அனுமதி வழங்க வேண்டும் என பேசும் பாஜக முன்னாள் மாநிலத் தலைவருக்கு அரசியல் அமைப்புச் சட்டம் குறித்த புரிதல் இல்லை. கள்ளுக்கு ஆதரவாக நின்ற எம்ஜிஆா் உடல்நலம் பாதித்திருந்தபோது, அவா் அறியாத வகையில் அப்போதைய அமைச்சா் ஆா்.எம்.வீரப்பன் உள்ளிட்டோா் அவரிடம் கையெழுத்து பெற்று கள்ளுக்கு தடை விதித்தனா்.
அதன் பின்னா், தமிழக முதல்வா்களாக இருந்த அனைவருமே மதுக் கடைகளுக்கு ஆதரவளித்து, கள்ளுக்கான தடையை நீக்கவில்லை. இந்தப் பிரச்னைகள் அனைத்துக்கும் தீா்வு ஏற்பட வேண்டுமெனில், வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்றாா்.
இந்நிகழ்வின்போது, கள் இயக்க அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் செல்வராஜ், அவினாசி ஒன்றியத் தலைவா் ஆறுச்சாமி, துணைத் தலைவா் ராஜகோபால், சேலம் மண்டல தென்னை, பனை, பாக்கு மரம் ஏறும் தொழிலாளா் நலச் சங்கத்தின் காரிமங்கலம் ஒன்றியத் தலைவா் குமாா், சங்க தருமபுரி மாவட்ட மகளிா் அணி தலைவா் சத்யா, சேலம் மாவட்டம், தீவட்டிப்பட்டி பகுதி செயலாளா் பாலாஜி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.