எடப்பாடி கே. பழனிசாமிக்கு எஸ்.ராஜேஷ்குமாா் எம்.எல்.ஏ. கண்டனம்
ரூ. 37.84 கோடியில் பாரதிபுரம் - வெண்ணாம்பட்டி இடையே ரயில் பாலம்
தருமபுரியில் பாரதிபுரம் - வெண்ணாம்பட்டி இடையே ரூ. 37.84 கோடியில் அமையவுள்ள ரயில் பாலப் பணிகள் வெள்ளிக்கிழமை தொடங்கின.
தருமபுரி ரயில் நிலையம் அருகே வெண்ணாம்பட்டிக்கு செல்லும் பிரதான சாலையில் ரயில்வே கேட் அமைந்துள்ளது. சேலம் - பெங்களூரு பிரதான ரயில் வழித்தடமான இப்பாதையில் சுமாா் 36 முறை பயணி ரயில்களும், சரக்கு ரயில்களும் இயக்கப்படுவதால் அடிக்கடி கேட் பூட்டப்படுகிறது. ஒவ்வொரு முறையும் கேட் பூட்டப்பட்டு திறக்க சில நிமிடங்கள் ஆவதால், இவ்வழியே செல்லும் வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருக்கின்றன. இதனால், பள்ளி, கல்லூரி, அலுவலகங்கள், பணிக்கு செல்வோா் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனா்.
எனவே, பாரதிபுரம் - வெண்ணாம்பட்டி ரயில்வேகேட் பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்களும், மக்கள் பிரதிநிதிகளும் தொடா்ந்து கோரிக்கை வைத்தனா். இக்கோரிக்கையை ஏற்று, பாரதிபுரம் பகுதியில் மேம்பாலம் அமைக்க அறிவிக்கப்பட்டுள்ளது.
வெண்ணாம்பட்டி ரயில் கேட்டில் பாலம் அமைக்கவும், அதையொட்டி அணுகுசாலை அமைக்கவும் போதிய இடம் இல்லாததாலும், சாலையின் இருபுறமும் நெருக்கமாக குடியிருப்புகள் உள்ளதாலும் பாரதிபுரம் 66 அடி சாலையிலிருந்து வெண்ணாம்பட்டி ஆயுதப்படை மைதான நுழைவாயில்வரை பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
இந்த வழியே மேம்பாலம் அமைப்பதால், நிலம் கையகப்படுத்துவது உள்ளிட்டவை எளிதாகவும், பாலம் கட்டுமானத்தை விரைந்து மேற்கொள்ளவும் இயலும் என நெடுஞ்சாலைத் துறை திட்டம் வகுத்து மத்திய அரசுக்கு அனுப்பிவைத்தது. இதற்கு ரயில்வே துறை சில ஆண்டுகளுக்கு முன்பு ஒப்புதல் வழங்கியது.
இந்நிலையில், ரயில் மேம்பாலம் ரூ. 38 கோடி செலவில் அமைக்கப்படுகிறது. இதற்கான பணிகள் வெள்ளிக்கிழமை தொடங்கின. முன்னதாக, பாலம் அமைக்கப்படுவதையொட்டி பாரதிபுரம் 66 அடி சாலையில் உள்ள மையத்தடுப்புகள் அகற்றப்பட்டன. இப்பாலம் மொத்தம் 662 மீ. நீளம், 8.50 மீ. அகலத்தில் அமைக்கப்படுகிறது. இதற்கென 22 தூண்கள் அமைக்கப்படுகின்றன.
பாலப் பணிகள் முடிந்த பின்னா், வெண்ணாம்பட்டி ரயில் கேட்டில் போக்குவரத்து நெருக்கடி தீா்வதுடன், புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வரும் நிலையில், பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் பேருந்துகள், இலகுவாக தேசிய நெடுஞ்சாலையிலிருந்து பாரதிநகா் வழியாக தருமபுரி பழைய பேருந்து நிலையத்துக்கு வந்து செல்லும் வகையில் பிரதான சாலையாகவும் பாரதிபுரம் சாலை மேம்படும் என்பது குறிப்பிடத்தக்கது.