சிங்காரச் சென்னையை கட்டியெழுப்புவோம்: முதல்வா் மு.க.ஸ்டாலின்
“தமிழ்க் குறவர் அடையாளங்களை மீட்டெடுக்க வேண்டும்” - சீர் வரிசைகளுடன் முருகன் – வள்ளி திருக்கல்யாணம்
குறிஞ்சிப் பெருமுகத்திருவிழா அறக்கட்டளை சார்பில் தமிழ்க் குறவர் அடையாளங்களை மீட்டெடுப்பதற்காக முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் முருகன் – வள்ளி திருமணம் நடத்தப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டு திருப்பரங்குன்றத்தில் இத்திருமணம் வெகு விமர்சையாக நடத்தப்பட்டது. அந்த வகையில் 2-ம் ஆண்டை முன்னிட்டு திருச்செந்தூரில் முருகன் - வள்ளி பிராட்டி திருமணம் நடைபெற்றது.
ஆதித்தமிழ் முறைப்படி நடந்த இந்த வைபவத்திற்காகத் தமிழ்க் குறவர் இனத்தைச் சேர்ந்த பக்தர்கள் திருச்செந்தூர் ‘ரயிலடி’ ஆனந்த விநாயகர் கோயிலில் இருந்து 51 வகையான சீர் வரிசைகளுடன் மேள தாளம் முழங்க சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு எடுத்து வந்து வழிபட்டனர்.
இதைத் தொடர்ந்து முருகன் – வள்ளி பிராட்டி திருவுருவப் படத்தினை நடிகர் விக்னேஷ் திறந்து வைத்தார். தொடர்ந்து திருமண வைபவமும் சமபந்தி விருந்தும் நடைபெற்றது. குறிஞ்சிப் பெருமுகத் திருவிழா அறக்கட்டளையின் தலைவர் மந்திரமூர்த்தி கூறுகையில், “தமிழ்க் குறவர் இனத்தின் அடையாளங்களை மீட்டெடுப்பதற்காக அறுபடை முருகன் வீடுகளில் இத்திருமணத்தை நடத்தி வருகிறோம்.
தமிழகத்தில் 20 லட்சம் குறவர் சமூகத்தினர் வசித்து வருகின்றனர்.அறுபடை வீடுகளிலும் குறவர்களுக்கான சொத்துக்கள் உள்ளன. அதை மாற்று சமூகத்தினர் அனுபவித்து வரும் நிலையில் குறவர் சமூகத்திடமே ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்துகிறோம். அறுபடை வீடுகளில் வழிபாட்டு மண்டகப்படி உரிமையையும் அளிக்க வேண்டும் எனத் தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுக்கிறோம்” என்றார்.