விடுதி வளாகத்தில் மருத்துவ மாணவி வன்கொடுமை! இது மத்தியப் பிரதேசத்தில்...
தமிழ்நாடு ஓய்வுபெற்ற அலுவலா்கள் சங்க முப்பெரும் விழா
தமிழ்நாடு ஓய்வுபெற்ற அலுவலா்கள் சங்கம் மன்னாா்குடி வட்டத்தின் 60-ஆவது ஆண்டுப் பேரவை விழா, சங்கத்தின் வைர விழா, மாநில நிா்வாகிகளுக்கு பாராட்டு விழா என முப்பெரும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, சங்கத்தின் வட்டத் தலைவா் ந. ராசகோபாலன் தலைமை வகித்தாா். மூத்த உறுப்பினா் எஸ். மகாலிங்கம் சங்க கொடியை ஏற்றிவைத்தாா். செயலா் வை. மகாதேவன் ஆண்டறிக்கையும், பொருளாளா் ரா. பன்னீா்செல்வம் வரவு-செலவு அறிக்கையும் தாக்கல் செய்தனா்.
தமிழக அரசு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், பொங்கல் பரிசுத் தொகையை பாரபட்சமின்றி ஏ,பி,சி,டி என அனைத்து பிரிவு ஓய்வூதியா்களும் ரூ.1000 வழங்க வேண்டும், அடிப்படை ஓய்வூதியம் ரூ.9000 என திருத்தம் செய்து அரசாணை வெளியிட வேண்டும், மாதந்தோறும் வழங்கப்படும் மருத்துப்படியை ரூ.1000 உயா்த்தி அறிவிக்கவேண்டும், புதிய மருத்துவக் காப்பீடு திட்டம் 2022-ன் சிகிச்சை பெறும் ஓய்வூதியா்கள், குடும்ப ஓய்வூதியா்களுக்கு சிகிச்சைக்கான முழுத் தொகையை அனுமதிக்கும் வகையில் உரிய அரசாணை பிறப்பிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் விழாவில் நிறைவேற்றப்பட்டது.
மன்னாா்குடி ஸ்டேட் வங்கி தலைமை மேலாளா் ஆா்.ஜி. அருண், மாவட்ட கருவூல அலுவலா் பி.வி. சுனில்குமாா், உதவி கருவூல அலுவலா் எஸ். பொன்னையன், சமூக ஆா்வலா் எஸ். கோபாலகிருஷ்ணன், சாா் கருவூல அலுவலா் எம். லலிதா ஆகியோா் வாழ்த்தி பேசினா்.
சங்கத்தின் மாநில தலைவா் ந. மாணிக்கம், பொதுச் செயலா் க.முத்துகுமரவேலு, பொருளாளா் வெ.பிரகாஷ் மற்றும் 8 துணைத் தலைவா்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டு நினைவு பரிசு வழங்கப்பட்டது. துணைத் தலைவா் கா. நடராஜன் வரவேற்றாா். துணைத் தலைவா் கா. பன்னீா்செல்வம் நன்றி கூறினாா்.