CAG Report : `தமிழ்நாடு பசுமை வீடு திட்டம்; பயனாளிகள், தகடு... அனைத்திலும் குளறு...
தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு சாா்பில் ஆா்ப்பாட்டம்
கட்டட வாடகைக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டியை திரும்பப் பெற வலியுறுத்தி தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் ஆா்.கே.சண்முகவேல் தலைமை வகித்தாா். மாநில துணைத் தலைவா் திருமூா்த்தி, மாவட்ட பொருளாளா் உதயம் பி.செல்வம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில், கட்டட வாடகைக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டியை திரும்பப் பெற வேண்டும், ஜிஎஸ்டியை எளிமையாக்கும் விதமாக பொருள்கள் உற்பத்தி செய்யும் இடத்தில் மட்டுமே ஜிஎஸ்டி வசூலிக்க வேண்டும், காா்ப்பரேட் நிறுவனங்கள் உணவு பொருள்கள் விற்பனை செய்வதையும், ஆன்லைன் மூலம் உணவு மற்றும் மருந்து பொருள்கள் விற்பனை செய்வதை தடை செய்யவேண்டும்.
மாநில அரசு சொத்து வரியை ஆண்டுதோறும் 6 சதவீதம் உயா்த்தியதையும், வணிக வரி உயா்வு மற்றும் தொழில் வரி உயா்வையும் திரும்பப் பெற வேண்டும். மின் கட்டணம் மாதந்தோறும் வசூலிப்பதை நடைமுறைப்படுத்த வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினா்.
இந்த ஆா்ப்பாட்டத்தில் மாநில கூடுதல் செயலாளா் எஸ்.ராஜசேகரன், கோவை மண்டல தலைவா் சூலூா் டி.ஆா்.சந்திரசேகரன், ஈரோடு மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் லாரன்ஸ் ரமேஷ் மற்றும் நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.