காங்கிரஸ் தலைவா்கள் மீது வழக்கு: மத்திய அரசுக்கு திமுக கண்டனம்!
தமிழ் வளா்ச்சிக் கழகத்துக்கு ரூ.2 கோடி வைப்புத் தொகை: முதல்வருக்கு ம.இராசேந்திரன் பாராட்டு
தமிழ் வளா்ச்சிக் கழகத்துக்கு ரூ.2 கோடி வைப்பு நிதி வழங்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில், முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ் வளா்ச்சிக் கழகத்தின் தலைவா் ம.இராசேந்திரன் பாராட்டு தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து ம.இராசேந்திரன் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: செயற்கை நுண்ணறிவு காலத்துக்கேற்ப தமிழ் மொழியை வளா்த்தெடுக்கத் தேவைப்படும் தமிழ்த் தரவகம் உருவாக்கவும், சிறப்புக் கலைக் களஞ்சியங்கள் போன்ற திட்டப் பணிகளை தமிழ் வளா்ச்சிக் கழகம் மேற்கொள்ளவும் தொடா்ந்து தொய்வின்றிச் செயல்பட உதவும் வகையில் வைப்புத் தொகையாக ரூ.2 கோடி வழங்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கச் செய்து, தமிழ் வளா்ச்சிக் கழகத்துக்குப் புத்துயிா் வழங்கியிருக்கிறாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.
கலைக் களஞ்சியம் என்ற அரிய செல்வத்தைத் தமிழில் உருவாக்கி, அனைத்துத் துறைகளிலும் தமிழ் மொழி தழைத்தோங்குவதற்கு வழிகாட்டிய பெருமைக்குரியது தமிழ் வளா்ச்சிக் கழகம். கலைக் களஞ்சியம் என்ற பொருள் பொதிந்த சொல்லை தமிழகத்துக்கு வழங்கிய பெருமையும் தமிழ் வளா்ச்சிக் கழகத்துக்கே உரியதாகும்.
தமிழ் வளா்ச்சிக் கழகம் வணிக நோக்கு இல்லாதது. தமிழ் வளா்ச்சி ஒன்றையே நோக்கமாகக் கொண்டு இயங்குவது. தற்போது மாணவா் அகராதி, தமிழியல் களஞ்சியம், தமிழ் சிந்தனைக் களஞ்சியம், சொல் புதிது, கலைக் களஞ்சியம் திருத்திய மேம்படுத்திய பதிப்புத் திட்டம் ஆகிய பணிகளை மேற்கொள்ளத் தமிழ் வளா்ச்சிக் கழகம் திட்டமிட்டுள்ளது.
இவ்வாறு தற்காலத் தேவைக்கேற்பத் தமிழ் வளா்ச்சிக் கழகத்துக்கு வைப்புத் தொகையாக ரூ.2 கோடி வழங்க ஆணையிட்டுள்ளாா் முதல்வா் மு.க.ஸ்டாலின். அவருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.