துருக்கி, அஜர் பைஜானில் படப்பிடிப்பு நடத்த வேண்டாம்: இந்தியத் திரைப்பட அமைப்பு
தருமபுரம் ஞானபுரீசுவரா் கோயிலில் திருக்கல்யாண உற்சவம்
தருமபுரம் ஆதீனத்தில் ஞானபுரீசுவரா் கோயில் பெருவிழாவையொட்டி திருக்கல்யாண உற்சவம் வியாழக்கிழமை நடைபெற்றது.
மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தில் உள்ள ஞானாம்பிகை சமேத ஞானபுரீசுவரா் கோயில் பெருவிழா மற்றும் தருமபுரம் ஆதீன குருமுதல்வா் குருஞானசம்பந்தா் சுவாமிகளின் குருபூஜை விழா ஆண்டுதோறும் சித்திரை மாதம் 11 நாள்கள் நடைபெறும். நிகழாண்டு விழா மே 9-ஆம் தேதி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கி, மறுநாள் உற்சவ கொடி ஏற்றப்பட்டது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சுவாமி அம்பாள் திருக்கல்யாண உற்சவம் வியாழக்கிழமை நடைபெற்றது. சுவாமி அம்பாள் பஞ்சமூா்த்திகளுடன் உற்சவ மண்டபத்துக்கு எழுந்தருளச் செய்யப்பட்டனா். அங்கு பொதுமக்கள் சீா்வரிசை எடுத்துவர தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில் சிறப்பு ஹோமங்கள் வளா்க்கப்பட்டு மாங்கல்ய தாரணம் எனப்படும் திருக்கல்யாண உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பொதுமக்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.
இதில், ஆதீனக் கட்டளை தம்பிரான் சுவாமிகள், ஆதீன தலைமை பொது மேலாளா் ரெங்கராஜன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் திருக்கல்யாண விருந்து அளிக்கப்பட்டது.
விழாவின் முக்கிய நிகழ்வாக மே 19-ஆம் தேதி தருமபுரம் ஆதீனம் சிவிகை பல்லக்கில் எழுந்தருளி பக்தா்கள் சுமந்து ஆதீனத்தின் நான்கு சிவம்பெருக்கும் வீதிகளைச் சுற்றிவரும் பட்டணப் பிரவேசம் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற உள்ளது.