தருமபுரி ஏரிக்கரையில் தீயில் எரிந்த நிலையில் ஆண் சடலம் போலீஸாா் விசாரணை
தருமபுரி: தருமபுரி ராமக்கா ஏரிக்கரையில் தீயில் எரிந்த நிலையில் கிடந்த ஆண் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.
தருமபுரி நகரில் அமைந்துள்ள ராமக்கா ஏரிக்கரை அருகே உள்ள சாலையில், ஆண் சடலம் கிடப்பதாக புதன்கிழமை மாலை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் நிகழ்விடம் சென்றனா். அங்கு ஆண் சடலம் உடல் பகுதி முழுவதும் தலையுடன் சோ்த்து தீயில் எரிந்த நிலையில் கிடந்தது. முழங்காலுக்கு கீழே கால் பகுதி மட்டும் எரியாமல் இருந்தது.
இறந்து கிடந்தவா் குறித்த விவரம் ஏதும் தெரியவில்லை. அவா் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாரா அல்லது யாரேனும் அவரை கொலை செய்து தீ வைத்து எரித்துச் சென்றனரா என தருமபுரி நகரக் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.