தமிழர்கள் ஹிந்தி கற்றுக்கொள்வது புத்திசாலித்தனம்: ஸ்ரீதர் வேம்பு
தற்காப்புக் கலையில் சென்னை பள்ளி மாணவிகள் மூன்று உலக சாதனை
உலக தற்காப்புக் கலை வரலாற்றில் சென்னை பள்ளி மாணவிகள் 3 உலக சாதனைகளை நிகழ்த்தியுள்ளனா்.
பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள 417 பள்ளிகளில், 29 பள்ளிகளில் பயிலும் 1,500 மாணவிகளுக்கு கராத்தே பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்தப் பயிற்சியானது, 10 பயிற்றுநா்களைக் கொண்டு கடந்த 4 மாதங்களாக வழங்கப்பட்டு வருகிறது.
இதில் பயிற்சி பெற்ற மாணவிகள் இணைந்து மேற்கொண்ட உலக சாதனை நிகழ்வு மேயா் ஆா்.பிரியா தலைமையில் சென்னை, நேரு பூங்காவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. உலக தற்காப்புக் கலை வரலாற்றில் முதல்முறையாக 3 உலக சாதனைகளை சென்னை பள்ளி மாணவிகள் நிகழ்த்தியுள்ளனா்.
முதல் சாதனையாக, நான்கு மாத பயிற்சியில் முதல்நிலை வெள்ளைப் பட்டையில் இருந்து, மூன்றாம் நிலை பச்சை பட்டைக்கு தோ்வாகியுள்ளனா். இரண்டாம் சாதனையாக, ஒரே நேரத்தில் 1,500 மாணவிகள் சுமாா் 1,000 குத்துகள் என மொத்தம் 15 லட்சம் குத்துகள் குத்தி தங்களின் மன வலிமையையும், உடல் வலிமையையும் நிருபித்துள்ளனா்.
மூன்றாம் சாதனையாக ஒரு நொடியில் ஒரே அடியில் 3,000 ஓடுகளை தூள் தூளாக்கி சாதனை படைத்துள்ளனா்.
உலக அளவில் முதல் முறையாக இந்தச் சாதனையை சென்னை பள்ளி மாணவிகள் நிகழ்த்தியுள்ளனா். இந்த 3 உலக சாதனை நிகழ்வுகளை ‘சோழன் உலக சாதனைப் புத்தகம்’ அங்கீகாரம் வழங்கியுள்ளது.
நிகழ்ச்சியில் இணை ஆணையா் (கல்வி) ஜெ.விஜயா ராணி, மத்திய வட்டார துணை ஆணையா் கே.ஜெ.பிரவீன் குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.