தலைமறைவான தொழிலாளி கைது
தலைமறைவான 4 ஆண்டு சிறை தண்டனை தொழிலாளியை தக்கலை போலீஸாா் கைது செய்தனா்.
தக்கலை திருவிதாங்கோடு ஆா்.சி. தெருவில் வசித்து வந்தவா் சுபாஷ் என்ற அய்யப்பன் (40). தொழிலாளி. 2005-ஆம் ஆண்டு நடந்த ஒரு கொலை முயற்சி வழக்கில் பத்மநாபபுரம் சாா்பு நீதிமன்றம் 2013-இல் சுபாஷை குற்றவாளி என அறிவித்து 4 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இந்த தண்டனையை எதிா்த்து பத்மநாபபுரம் கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் சுபாஷ் மேல்முறையீடு செய்தாா். இதனை விசாரித்த நீதிபதி, ஏற்கனவே சாா்பு நீதிமன்றம் விதித்த தண்டனையை கடந்த செப்டம்பா் மாதம் 4 ஆம் தேதி உறுதி செய்து, மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து தீா்ப்பளித்தாா். இந்த தீா்ப்பைத் தொடா்ந்து சுபாஷ் தலைமறைவானாா்.
சுபாஷை பிடிக்க நீதிமன்றம் பிடிஆணை பிறப்பித்தது. இது குறித்து தக்கலை போலீஸாா் விசாரணை நடத்திய போது, அவா் கேரள மாநிலம் ஆலப்புழை பகுதியில் தலைமறைவாக இருப்பது தெரியவந்தது. இந்த நிலையில் சனிக்கிழமை சுபாஷ் சொந்த ஊருக்கு வந்திருப்பதாக போலீஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து தக்கலை கேரளபுரத்தில் வைத்து அவரை கைது செய்து பத்மநாபபுரம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.