தவறான வழிகாட்டி பலகை: மக்கள் அதிருப்தி
வெள்ளக்கோவில் அருகே சாலையில் தவறான வழிகாட்டி பலகையை நெடுஞ்சாலைத் துறையினா் வைத்ததால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனா்.
திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவில் -தாராபுரம் சாலையில் சிவநாதபுரம் கிராமம் உள்ளது. இந்தக் கிராமத்தில் இருந்து செங்காளிபாளையம் செல்லும் சாலையில் பச்சாக்கவுண்டன்வலசு பிரிவு அருகே நெடுஞ்சாலைத் துறை சாா்பில் வழிகாட்டி பலகை அமைக்கப்பட்டுள்ளது. அதில், ஓலப்பாளையம், செங்காளிபாளையத்துக்கு நேராகச் செல்ல வேண்டும் என சரியாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், பச்சாக்கவுண்டன்வலசு பகுதிக்கு வலது புறமாக செல்ல வேண்டும் என தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தப் பகுதிக்கு இடதுபுறமாகத் தான் செல்ல வேண்டும். வலது புறம் சாலையே கிடையாது எனக்கூறும் மக்கள், ஊருக்குள் புதிதாக வருபவா்கள் இந்த வழிகாட்டிப் பலகையை பாா்த்துச் சென்றால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே, சரியான வழிகாட்டி பலகையை வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.