தவெக மாநாட்டில் பிளக்ஸ் பேனர் வைக்க முயன்ற மாணவர் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு!
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இனாம்கரிசல் குளத்தில் தவெக மாநாட்டிற்கு பிளக்ஸ் பேனர் வைப்பதற்காகக் கம்பி எடுத்து வந்தபோது மின்சாரம் பாய்ந்து கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இனாமகரிசல் குளத்தைச் சேர்ந்த காளியப்பன் மகன் காளீஸ்வரன்(19). இவர் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிருஷ்ணன் கோயிலில் உள்ள தனியார் கல்லூரியில் விஸ்காம் 3-ம் ஆண்டு படித்து வந்தார். விஜய் ரசிகரான காளீஸ்வரன், ஆகஸ்ட் 21-ம் தேதி மதுரையில் நடைபெறும் தமிழக வெற்றிக்கழக 2-வது மாநில மாநாட்டிற்காக பிளக்ஸ் பேனர் வைப்பதற்காக தனது நண்பருடன் சேர்ந்து இரும்பு கம்பி எடுக்கச் சென்று உள்ளார்.
செவ்வாய்க்கிழமை இரவு 10 மணியளவில் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள கடையிலிருந்து இரும்பு கம்பியை எடுத்து வந்தபோது, உயர் அழுத்த மின் ஒயரில் கம்பி உரசியதில் காளீஸ்வரன் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இங்குப் பரிசோதித்த மருத்துவர்கள் காளீஸ்வரன் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து வன்னியம்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கல்லூரி மாணவர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் விஜய் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.