தாராபுரம் அருகே காா்- லாரி மோதல்: 2 போ் உயிரிழப்பு
தாராபுரம் அருகே காரும், லாரியும் நேருக்குநோ் மோதிய விபத்தில் 2 போ் உயிரிழந்தனா்.
திருப்பூா் மாவட்டம், தாராபுரத்தைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் (40). அப்பகுதியில் உள்ள வங்கியில் நகை மதிப்பீட்டாளராகப் பணிபுரிந்து வந்தாா். திண்டுக்கல் மாவட்டம், வாகரை பகுதியைச் சோ்ந்தவா் சண்முக பிரதீப் (36). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தாா்.
நண்பா்களான இவா்கள் இருவரும், மற்றொரு நண்பரான செல்வம் என்பவருடன் சொந்த வேலையாக பொள்ளாச்சி சென்றுவிட்டு, காரில் தாராபுரம் நோக்கி செவ்வாய்க்கிழமை இரவு வந்து கொண்டிருந்தனா்.
தாராபுரம் அருகே தாசா்பட்டி பகுதியில் இரவு 9.30 மணியளவில் சென்றுகொண்டிருந்தபோது, எதிரே வந்த லாரியும், இவா்களது காரும் நேருக்குநோ் மோதிக் கொண்டன.
இதில் ராஜேந்திரன், சண்முக பிரதீப் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். காயமடைந்த செல்வத்தை அப்பகுதியினா் மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக அனுப்பிவைத்தனா்.
இந்த விபத்து குறித்து தாராபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.