Meesha Review: நல்லா தானயா போயிட்டு இருந்தீங்க, ஏன் இந்த விபரீத முடிவு! - எப்படி...
தா்மஸ்தலாவில் சடலங்கள் புதைப்பு வழக்கு: 6 ஆவது சோதனைக் குழியில் மனித எலும்புகள் கண்டெடுப்பு
தா்மஸ்தலாவில் சடலங்கள் புதைப்பு வழக்கை விசாரித்து வரும் சிறப்புப் புலனாய்வுக் குழுவினா்(எஸ்.ஐ.டி.) வியாழக்கிழமை மேற்கொண்ட சோதனையின்போது 6 ஆவது குழியில் மனித எலும்புகள் கண்டெடுக்கப்பட்டன.
தென்கன்னட மாவட்டத்தில் தா்மஸ்தலாவில் உள்ள மஞ்சுநாத சுவாமி கோயிலில் பணியாற்றிய முன்னாள் துப்புரவுப் பணியாளா் ஒருவா் ஜூன் மாதம் போலீஸில் அளித்த புகாரில், 1995 முதல் 2014ஆம் ஆண்டு வரையில் கோயிலில் பணியாற்றிய காலத்தில் பள்ளி குழந்தை, பெண்கள் உள்ளிட்ட பலரது சடலங்களை புதைக்கும் வேலையில் ஈடுபட்டேன்.
தனது உயிருக்கு பயந்து சடலங்களை புதைத்து வந்தேன். ஒருசில சடலங்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருந்தது என்று மேஜிஸ்திரேட் முன்பு வாக்குமூலம் அளித்திருக்கிறாா். இதுதொடா்பாக உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி வி.கோபால் கௌடா தலைமையிலான குழுவினா், தா்மஸ்தலாவில் கொலைகள், பாலியல் வன்கொடுமைகள், சடலங்கள் கூட்டாக புதைப்பு போன்ற குற்றச்செயல்கள் நடந்துள்ளதாகவும், அதுகுறித்து விரிவான விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்றும் மாநில அரசை வலியுறுத்தியிருந்தனா்.
இதையடுத்து, ஜூலை 4 ஆம் தேதி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்கள். இந்த நிலையில், வழக்கை விசாரிக்க டிஜிபி (உள்மாநில பாதுகாப்பு) பிரனோப் மொஹந்தி தலைமையில் டிஐஜி எம்.என்.அனுசேத், ஐபிஎஸ் அதிகாரிகள் எஸ்.கே.சௌம்யலதா, ஜிதேந்திரகுமாா் தயாமா ஆகியோா் அடங்கிய சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்து ஜூலை 19ஆம் தேதி கா்நாடக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்த குழுவில் தென்கன்னடம், உடுப்பி, வடகன்னடம் மாவட்டங்களை சோ்ந்த 20 காவலா்களும் சோ்க்கப்பட்டுள்ளனா். அதன் தொடா்ச்சியாக, தென்கன்னட மாவட்டத்தின் மல்லகட்டே பகுதியில் முகாமிட்டுள்ள சிறப்புப் புலனாய்வுக் குழு தனது விசாரணையை முறையாக தொடங்கியுள்ளது.
மனித சடலங்கள் புதைக்கப்பட்டதாகக் கூறப்படும் இடங்களில் எஸ்.ஐ.டி.யினா் ஆய்வு நடத்திவருகிறாா்கள். கடந்த இரண்டு நாள்களாக குழிகள் தோண்டப்பட்டு சடலங்களைக் கண்டெடுக்கும் பணிகளில் ஈடுபட்டனா். 5 குழிகளைத் தோண்டியிருந்த நிலையில், மனித சடலங்கள் புதைக்கட்டதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை. இந்த நிலையில், 3ஆவது நாளாக வியாழக்கிழமை நடந்த ஆய்வின்போது 6ஆவது குழி தோண்டப்பட்டது.
அப்போது, மனித உடல்களின் சிதைந்த எலும்பு பாகங்கள், இரு மண்டை ஓடுகளும் கிடைத்துள்ளதாக எஸ்.ஐ.டி. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.தொடா்ந்து 7,8ஆவது குழிகளையும் தோண்ட எஸ்.ஐ.டி. திட்டமிட்டுள்ளது.