திசையன்விளை தினசரிச் சந்தையில் தீ விபத்து: ரூ. 9 லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதம்
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை தினசரிச் சந்தையில் துணிக்கடை மற்றும் டீ கடையில் அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. 9 லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதமடைந்தன.
திசையன்விளை பேரூராட்சிக்கு சொந்தமான தினசரி, வாரச் சந்தையில் 150-க்கும் அதிகமான கடைகள் உள்ளன. இங்குள்ள சில கடைகளில் இருந்து அதிகாலை கரும்புகை எழும்பியதாம்.
இதனையடுத்து, தீ மளமளவென பரவி எரியத் தொடங்கியதைப் பாா்த்த அப்பகுதி மக்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனா். திசையன்விளை தீயணைப்பு நிலைய வீரா்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனா்.
அதற்குள்ளாக, செல்லம் மகன் ராபா்ட் பாக்கிய ஜெயசீலன் என்பவருக்கு சொந்தமான பழக்கடையும், வாகைநேரியைச் சோ்ந்த பொன்ராஜ் மனைவி அன்னக்கிளி என்பவருக்கு சொந்தமான துணிக்கடையும் தீயில் எரிந்து சேதமடைந்தன.
இதில், பாக்கிய ஜெயசீலனுக்கு ரூ. 4 லட்சம், அன்னக்கிளிக்கு ரூ. 5 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.
இது தொடா்பாக, திசையன்விளை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.