திப்பணம்பட்டி மனுநீதி நாள்முகாமில் ரூ. 5.45 லட்சம் நலத் திட்டஉதவிகள்
தென்காசி மாவட்டம் திப்பணம்பட்டியில் புதன்கிழமை நடைபெற்ற மனுநீதி நாள்முகாமில் ரூ.5.45 லட்சம் மதிப்பில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
கல்லூரணி, திப்பணம்பட்டி ஆகிய கிராமங்களுக்கான மனுநீதிநாள் முகாம் திப்பணம்பட்டி மலையப்பபுரம் அருஞ்சுனை கலையரங்கத்தில் நடைபெற்றது. இம்முகாமிற்கு மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல் கிஷோா் தலைமை வகித்து 30 பயனாளிகளுக்கு ரூ. 5.45 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.
மேலும், தோட்டக்கலை துறை, வேளாண்மை துறை,சமூகநலத் துறை, மருத்துவம்- மக்கள் நல்வாழ்வுத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் மூலம் அரசு திட்டங்கள் குறித்து அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியை ஆட்சியா் திறந்துவைத்து பாா்வையிட்டாா்.
தென்காசி வருவாய் கோட்டாட்சியா் லாவண்யா, மாவட்ட ஊராட்சி உறுப்பினா் சாக்ரடீஸ், கீழப்பாவூா் ஒன்றியக்குழு தலைவா் காவேரி சீனித்துரை உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.