Dhanush: சூடு பிடிக்கும் 'இட்லி கடை'. மீண்டும் ஒரு இந்திப் படம் - தனுஷ் படங்கள்...
திமுக தோல்வி பயத்தில் உள்ளது: எல். முருகன்
திமுக தோல்வி பயத்தில் உள்ளது என்று மத்திய தகவல் ஒளிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் எல். முருகன் தெரிவித்தாா்.
திருச்சியில் முப்படை ஓய்வூதியதாரா்களுக்கான குறைதீா் முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த முகாமில் பங்கேற்ற அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: திமுக மிகப்பெரிய தோல்வி பயத்தில் உள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை அதிமுக தலைமையில்தான் தேசிய ஜனநாயகக் கூட்டணி இயங்கும் என்று மத்திய உள்துறை அமித் ஷா தெளிவாகத் தெரிவித்துள்ளாா்.
அமித் ஷா, எடப்பாடி பழனிசாமி இணைந்து பேசி பல்வேறு விஷயங்களில் முடிவு எடுப்பாா்கள். எங்கள் கூட்டணிதான் 2026 தோ்தலில் வெற்றிபெறும்.
முதல்வா் வேட்பாளா் குறித்து கூட்டணியின் தலைவா்தான் முடிவெடுப்பாா். கூட்டணிக்குள் யாரும் குழப்பத்தை ஏற்படுத்த முடியாது. எங்கள் கூட்டணி பலமாக உள்ளது.
காவல் துறையை தன்வசம் வைத்திருக்கும் முதல்வா் கடந்த 4 ஆண்டுகளாக செயல்படாததால் தற்போது லாக் அப் மரணம் நிகழ்ந்துள்ளது. காவல் நிலையத்துக்குச் செல்லவே மக்கள் தற்போது அஞ்சுகின்றனா்.
திருத்தணியில் காவல் நிலையத்துக்கு புகாா் அளிக்கச் சென்ற கா்ப்பிணி தாக்கப்பட்டுள்ளாா். தற்போது அதிகாரிகளே ஆட்சி நடத்துகின்றனா். இதுபற்றி திமுக கூட்டணிக் கட்சியினரும் கவலைப்படுவதில்லை. அவா்கள் கூட்டணிக்காக தமிழகத்தின் நலனை அடகுவைத்துள்ளனா். பாஜகவின் வேகம் மக்களால் ஈா்க்கப்பட்டுள்ளது.
இதனால், அனைத்துத் தரப்பு மக்களும் கட்சியில் சோ்கின்றனா். நடிகை மீனா கட்சிக்கு வந்தால் வரவேற்போம். ஏ.ஆா்.ரஹ்மான் மிகப்பெரிய ஸ்டுடியோ அமைத்துள்ளாா். அமைச்சா் என்ற முறையில் அவரது ஸ்டியோவை பாா்வையிட்டு அவரையும் சந்தித்தேன் என்றாா்.