திருச்சி: 50,000 பேருக்கு வீட்டுமனை பட்டா! காய்கறி அங்காடிக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர்
திருச்சி: திருச்சியில் இன்று நடைபெற்ற அரசு விழாவில், 50 பேருக்கு இலவச வீட்டு மனை வழங்கிய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், நவீன காய்கறி அங்காடிக்கு அடிக்கல் நாட்டினார்.
இரண்டு நாள்கள் அரசுப் பயணமாக தமிழக முதல்வர் ஸ்டாலின் திருச்சி வந்துள்ளார். இன்று வெள்ளிக்கிழமை காலை விருந்தினர் மாளிகையிலிருந்து புறப்பட்டு திருச்சி மன்னார்புரம் நான்குரோடு சந்திப்பு, கிராப்பட்டி, எடமலைப்பட்டி புதூர் வழியாக பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள பஞ்சப்பூர் பேருந்து முனையத்திற்கு சென்றார்.
அங்கு, புதிய பேருந்து முனையத்துக்கு அருகே பெரியார் சிலையை திறந்து வைத்தார். மேலும், ரூ.236 கோடி மதிப்பிலான ஒருங்கிணைந்த காய்கறி அங்காடிக்கு அடிக்கல் நாட்டினார். பின்னர், ரூ.128.94 கோடியில் கட்டப்பட்டுள்ள அண்ணா கனரக சரக்கு வாகன முனையத்தை திறந்து வைத்து, பேரறிஞர் அண்ணாவின் உருவ சிலையை திறந்து வைத்தார்.
50 ஆயிரம் பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா
இதைத்தொடர்ந்து பஞ்சப்பூர் பேருந்து முனைய வளாகத்தில் அரசு விழா நடைபெற்றது. விழாவில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் வரவேற்று பேசினார். நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு முதன்மை செயலாளர் கார்த்திகேயன் திட்ட விளக்க உரை ஆற்றினார்.
விழாவிற்கு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமை தாங்கி பேசினார். விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர்
விழாவில் , 50 ஆயிரம் பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
மேலும் ரூ.463.30 கோடி மதிப்பில் நிறைவுற்ற பணிகளை திறந்து வைத்து, ரூ.276.95 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ.830.35 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விழா பேருரை ஆற்றினார்.
விழா முடிந்தவுடன் முதல்வர் அரசு விருந்தினர் மாளிகைக்கு சென்றார். பின்னர் சிறிது நேரம் ஓய்வுக்கு பின் மாலை 5 மணிக்கு புறப்பட்டு திருச்சி அடுத்த எம்.ஐ.இ.டி கல்லூரியில் நடைபெறும் இஸ்லாமிய தமிழ் இலக்கிய 9 -வது மாநாட்டில் கலந்துகொண்டு மாநாட்டை தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றுகிறார். பிறகு நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு இரவு விமான மூலம் சென்னை செல்கிறார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் திருச்சி பயணத்தால் திமுகவினர் உற்சாகமடைந்துள்ளனர். முதல்வரின் வருகையையொட்டி திருச்சியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.