கோயில் நிலத்தை மீட்கக் கோரிய வழக்கு: தென்காசி ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு
திருச்செந்தூர் கந்தசஷ்டி விழா… பக்தர்களுக்கான வசதிகள், விழா ஏற்பாடுகள் தீவிரம்..!
முருகனின் அறுபடை வீடுகளில் கடற்கரை ஓரத் தலமும், இரண்டாம் படை வீடாகவும் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்களும், விடுமுறை மற்றும் விசேஷ நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்களும் சுவாமி தரிசனம் பெற்றுச் செல்கின்றனர். இங்கு நடைபெறும் முக்கிய விழாக்களில் கந்தசஷ்டி திருவிழா மிகச்சிறப்பானது. 6 நாள்கள் நடைபெறும் இந்த கந்தசஷ்டி திருவிழாவில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை தரும் பக்தர்கள் கோவில் வளாகத்தில் தங்கி இருந்து விரதம் மேற்கொள்வார்கள். இந்த ஆண்டு கந்த சஷ்டி திருவிழா, வரும் நவம்பர் 2-ம் தேதி தொடங்க உள்ளது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நவம்பர் 7-ம் தேதி மாலையில் கடற்கரை பகுதியில் நடைபெற உள்ளது. இதைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வருகை தருவார்கள். இந்த நிலையில் இந்த கந்த சஷ்டி திருவிழாவிற்காக கோயிலுக்கு வருகை தந்து விரதம் இருக்கும் பக்தர்களின் வசதிக்காக கோயில் வளாகத்தில் 18 இடங்களில் 1,11,118 சதுர அடியில் தற்காலிக கொட்டகைகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
இந்த கொட்டகைகள் அனைத்தும் மழை நேரத்தில் பக்தர்கள் சிரமமின்றி தங்குவதற்காக தகரத்தால் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த தற்காலிக கொட்டகையில் 6,500 பக்தர்கள் வரை தங்கி விரதம் மேற்கொள்ளலாம். கொட்டகை அமைக்கும் பணிகளில் 200-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் பக்தர்களின் வசதிக்காக கோயில் வளாகத்தில் ஏற்கனவே உள்ள 225 நிரந்த கழிவறைகள் தவிர கூடுதலாக 190 தற்காலிக ஆண், பெண் கழிவறைகள் அமைக்கப்பட்டு வருகிறது. 100 இடங்களில் குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் சுவாமி தரிசனம் செய்ய வரிசையில் செல்லும் பக்தர்களுக்கு தன்னார்வலர்கள் மூலம் குடிநீர் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திருவிழாவின் போது நடைபெறும் யாகசாலை பூஜை, தங்க ரதம் வீதி உலா மற்றும் இதர நிகழ்ச்சிகளை பக்தர்கள் அகன்ற திரையில் கண்டு களிக்க 15 எல்.இ.டி டி.விக்கள் வைக்கப்பட உள்ளது. பக்தர்களின் பாதுகாப்பு கருதி திருக்கோயில் நுழைவாயில் முதல் கடற்கரை வரை பல இடங்களில் தற்காலிக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணிகளும் நடந்து வருகிறது. கந்த சஷ்டி விழாவில் சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.