தாணேவில் ரயிலில் சென்ற பெண்ணுக்கு பிரசவ வலி: அபாய சங்கிலியை இழுத்த சக பயணிகள்!
திருச்செந்தூர் குடமுழுக்கு: வீடுகள் தோறும் வழங்கப்பட்ட பிரசாத பைகள்; உள்ளூர் மக்கள் மகிழ்ச்சி
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடும் கடற்கரை ஓரத் தலமும் ஆனது திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். கடந்த 2009-ம் ஆண்டுக்குப் பிறகு 15 ஆண்டுகள் கழித்து கடந்த ஜூலை 7-ம் தேதி குடமுழுக்கு வெகு விமரிசையாக நடந்தது. குடமுழுக்கினை காண சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.

குடமுழுக்கினை முன்னிட்டு கடந்த 1-ம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. குடமுழுக்கு நிறைவுற்ற நிலையில், தற்போது மண்டல பூஜைகள் நடந்து வருகிறது. 30 நாள்கள் நடைபெறும் இந்த மண்டல பூஜை நிறைவுற்றவுடன், 31-வது நாளில் ஆவணித் திருவிழா தொடங்கி 11 நாள்கள் நடைபெறவுள்ளது. இதனால் திருச்செந்தூரில் தினம் தினம் பக்தர்களின் கூட்டம் சுவாமி தரிசனத்திற்காக அலை மோதுகிறது.
குடமுழுக்கினை முன்னிட்டு சுமார் 1 லட்சம் அருட்பிரசாத பைகள் தயார் செய்யப்பட்டது. இப்பைகளை திருக்கோயில் பணியாளர்கள் திருச்செந்தூர் நகராட்சிக்குட்பட்ட 20 ஆயிரம் வீடுகளுக்கும் வீடு வீடாகச் சென்று வழங்கி வருகிறார்கள். புனித தீர்த்தம், பழனியில் இருந்து கொண்டுவரப்பட்ட மூலிகை விபூதி, தாளம்பூ குங்குமம், திருச்செந்தூர் முருகப் பெருமானின் புகைப்படம் மற்றும் ஒரு லட்டு ஆகியவை அருள்பிரசாத பைகளில் இடம் பெற்றுள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை திருக்கோயில் தக்கார் மற்றும் அறங்காவலர் குழுத் தலைவர் அருள்முருகன், திருக்கோயில் இணை ஆணையர் மற்றும் செயல் அலுவலர் ஞானசேகரன் ஆகியோர் செய்திருந்தனர். திருச்செந்தூர் முருகன் கோயில் அருள்பிரசாதம் வீடு வீடாக வழங்கப்படுவதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுவரையிலும் இப்படி வீடு வீடாக வழங்கப்பட்டதில்லை என்பதால் திருக்கோயில் நிர்வாகத்தின் இச்செயலை உள்ளூர் மக்கள் பாரட்டி வருகின்றனர்.