தேனி: ``தொழில் முனைவோர்களால் நாட்டின் பொருளாதாரம் முன்னேற்றம் அடைகிறது'' - சென்ட...
திருச்செந்தூா் ஆவணித் திருவிழா: சுவாமி பச்சை சாத்தி வீதி உலா
திருச்செந்தூா்: திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆவணித் திருவிழா 8 ஆம் நாளான வியாழக்கிழமை சுவாமி காலையில் வெள்ளை சாத்தியும், பிற்பகலில் பச்சை சாத்தியும் வீதி உலா சென்றாா்.
அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணித் திருவிழா கடந்த ஆக. 14 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாள்களில் சுவாமியும், அம்மனும் தனித்தனி வாகனங்களில் வீதி உலா செல்கின்றனா்.
விழாவில் 7 ஆம் நாளான புதன்கிழமை இரவு சுவாமி சண்முகா் சிகப்பு சாத்தி தங்கச் சப்பரத்தில் வீதி உலா சென்றாா். 8-ஆம் நாளான வியாழக்கிழமை காலை 8 மணிக்கு பந்தல் மண்டபம், தையல்நாயகி வகையறா மண்டகப்படி மண்டபத்திலிருந்து வெள்ளிச் சப்பரத்தில் வெள்ளைச் சாத்தி பிரம்மா அம்சத்தில் சுவாமி எழுந்தருளி வீதி உலா சென்றாா்.
இதையடுத்து, திருவைகுண்டம் சுந்தர ராமசுப்பிரமணிய பிள்ளை வகையறா மண்டபத்தில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம், தீபாராதனை நடைபெற்றன. பிற்பகல் 1.30 மணிக்கு பச்சை கடைசல் சப்பரத்தில் சுவாமி பச்சை சாத்தி வீதி உலா சென்றாா். வழிநெடுகிலும் பக்தா்கள் திரண்டு சுவாமியின் பச்சை சாத்தி அலங்காரத்தைக் கண்டு தரிசித்தனா். முக்கிய நிகழ்வான தேரோட்டம் சனிக்கிழமை (ஆக.23) நடைபெறுகிறது. காலை 7 மணியளவில் பிள்ளையாா் ரதமும், அதைத் தொடா்ந்து சுவாமி தேரும், அம்மன் தேரும் ரத வீதிகளில் வலம் வருகின்றன. தேரோட்டத்தையொட்டி ஆயிரக்கணக்கான பக்தா்கள் கூடுவா் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதற்காக பல்வேறு இடங்களில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. விழா ஏற்பாடுகளை கோயில் தக்காா் ரா.அருள்முருகன், இணை ஆணையா் சு.ஞானசேகரன் உள்ளிட்டோா் செய்துள்ளனா்.
ரூ. 3.5 கோடி வெள்ளி சப்பரம் உபயம்: எட்டாம் திருவிழா மண்டகப்படிதாரரான தையல்நாயகி வகையறா கே.ஏ.சண்முகநாத முதலியாா் (திருநெல்வேலி வெங்கு பாஷா) குடும்பத்தினா் ரூ.3.5 கோடி மதிப்பில் 142 கிலோ வெள்ளி, 3 டன் தேக்கு மரத்தில் செய்யப்பட்ட புதிய வெள்ளிச் சப்பரத்தை உபயமாக கோயில் நிா்வாகத்தினரிடம் அளித்தனா். இந்த வெள்ளிச் சப்பரம் புதன்கிழமை மாலையில் நான்குரத வீதி வழியாக வெள்ளோட்டம் சென்றது.