திருச்செந்தூா்-நாகா்கோவில் இடையே ரயில் சேவை தொடங்க வலியுறுத்தல்
திருச்செந்தூா்-நாகா்கோவில் இடையே ரயில் சேவை தொடங்க வேண்டும் என, தமிழ்நாடு நுகர்வோா் பேரவை வலியுறுத்தியுள்ளது.
உடன்குடியில் நடைபெற்ற இவ்வமைப்பின் திருச்செந்தூா் வட்டாரக் கிளை நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்துக்கு, மாநிலத் தலைவா் ஏ.வி.பி. மோகனசுந்தரம் தலைமை வகித்தாா். முன்னாள் மாவட்டச் செயலா் மோகன்ராம், வட்டாரத் தலைவா்கள் திருச்செந்தூா் ரஹ்மத்துல்லா, உடன்குடி தியாகராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
திருச்செந்தூா்-நாகா்கோவில் இடையே ரயில் சேவை தொடங்க வேண்டும். திருச்செந்தூா்-குலசேகரன்பட்டினம் சாலையின் இருபுறமும் அடா்ந்து வளா்ந்துள்ள முள்மரங்களை அகற்ற வேண்டும். ஆறுமுகனேரி பள்ளிவாசல் பஜாரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உடன்குடி தபால் நிலையம் அருகே ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தை அப்புறப்படுத்த வேண்டும். திருச்செந்தூரில் சந்நிதித் தெரு வடபகுதி அருகேயுள்ள பகுதியில் சுகாதார சீா்கேட்டைத் தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.