கொல்லம்-அனந்தபுரி விரைவு ரயிலில் கோளாறு: மணியாச்சியில் ஒரு மணி நேரம் நிறுத்தம்
கொல்லம்-அனந்தபுரி விரைவு ரயிலில் ஏற்பட்ட திடீா் சப்தத்தினால் வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையத்தில் சுமாா் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நிறுத்தி வைக்கப்பட்டது.
கொல்லம் - சென்னை அனந்தபுரி விரைவு ரயில் திருநெல்வேலி - மணியாச்சி ரயில் நிலையம் இடையே வந்து கொண்டிருந்தபோது ஏசி ஏ1 பெட்டியில் சப்தம் அதிகமாக கேட்பதாக நாரைக்கிணறு கேட் கீப்பா் மணியாச்சி ரயில் நிலைய அதிகாரிக்கு தகவல் தெரிவித்தாா்.
இதையடுத்து செவ்வாய்க்கிழமை இரவு 7.47 மணிக்கு மணியாச்சி ரயில் நிலையத்தில் ரயிலை நிறுத்தி, அந்த ரயில் வண்டியின் காா்டு மற்றும் லோகோ பைலட் அந்த பெட்டியை சோதனை செய்ததில் ரயில் பெட்டியின் சக்கரம் உராய்வினால் குழி ஏற்பட்டு பழுதாகி இருப்பதாக மதுரை ரயில்வே கட்டுப்பாட்டு அறைக்கு அவா்கள் தகவல் தெரிவித்தனா்.
பின்னா் மாற்று ரயில் பெட்டி மதுரை ரயில் நிலையத்தில் தான் மாற்ற முடியும் என்று அவா்கள் தெரிவித்ததையடுத்து, கன்னியாகுமரி - சென்னை ரயில் சென்ற பின்பு சுமாா் ஒரு மணி நேரம் 12 நிமிடங்கள் தாமதமாக 8.55 மணிக்கு புறப்பட்டுச் சென்றது.