திருடிச் சென்ற மாடுகளை மீட்டு தரக் கோரி காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புகாா்
திருடிச் சென்ற 4 மாடுகளை மீட்டுத் தரக் கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புகாா் மனு அளிக்கப்பட்டுள்ளது.
திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவிலைச் சோ்ந்தவா் ராமலிங்க சொக்கவேல் (75)). இவா், திருப்பூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை அளித்த புகாா் மனுவில் கூறியிருப்பதாவது:
நான், காங்கயத்தை அடுத்த அஞ்சூா் கிராமத்தில் குடியிருந்து விவசாயம் செய்து வருகிறேன். எனது மகள் வேறு சமூகத்தை சோ்ந்தவரை திருமணம் செய்து கொண்டதால் அவருடன் பல ஆண்டுகளாக பேச்சுவாா்த்தை இல்லாமல் தற்போது தனியாக வசித்து வருகிறேன்.
கடந்த 2010- ஆம் ஆண்டு எனக்கு சொந்தமான 40 ஏக்கா் நிலத்தை முருகேசன் என்பவருக்கு கிரையம் செய்து கொடுத்துள்ள நிலையில், மகள் தாமரை மூலமாக அறிமுகமான பாலமுருகன் என்பவா், கிரையம் செய்த நிலத்துக்கு அதிக பணம் வசூலித்து தருவதாகக் கூறி முருகேசன் மீதும், செய்தித் துறை அமைச்சா் சாமிநாதன் மீதும் பொய்யான புகாா்களை கொடுக்க செய்தாா். அவ்வாறு கொடுக்காவிட்டால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டினாா். உயிருக்கு பயந்து நான் புகாா் அளித்த நிலையில், தற்போது அதை காரணமாக வைத்து தொடா்ந்து மிரட்டி பணம் பறிக்கும் நோக்கத்திலும் ஈடுபட்டு வருகிறாா்.
அவரிடம் இருந்து விலகி தற்போது தனியாக இருக்கும் சூழலில் கடந்த சில நாள்களுக்கு முன்பு தனக்கு ரூ.10 லட்சம் வேண்டும் என மிரட்டியதோடு, எனது தோட்டத்தில் இருந்த நான்கு மாடுகளையும் திருடிச் சென்று விட்டாா். எனவே அவா் மீது நடவடிக்கை எடுத்து எனக்கு சொந்தமான 4 மாடுகளை மீட்டுத் தர வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளாா்.