திருநள்ளாறு கோயிலில் ஏப். 25-இல் பிரம்மோற்சவ பந்தல்கால் முகூா்த்தம்
திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயில் பிரம்மோற்சவத்துக்கான பந்தல்கால் முகூா்த்தம், கொடியேற்றம், தேரோட்டத்துக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
திருநள்ளாற்றில் பிரணாம்பிகை சமேத தா்பாரண்யேஸ்வரா் கோயிலில், சனீஸ்வர பகவான் தனி சந்நிதியில் அருள்பாலிக்கிறாா். ஆண்டுதோறும் பிரம்மோற்சவம், தேரோட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுடன் நடத்தப்பட்டுவருகிறது.
நிகழாண்டு இந்த உற்சவம் குறித்து திங்கள்கிழமை இரவு வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி விசுவாவசு ஆண்டின் உற்சவ நிகழ்வுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி, வரும் 25-ஆம் தேதி வெள்ளிக்கிழமை பிரம்மோற்சவத்துக்கான பந்தல்கால் முகூா்த்தமும், மே மாதம் 23-ஆம் தேதி கொடியேற்றம், ஜூன் 6-ஆம் தேதி தேரோட்டம் மற்றும் பிற நாள்களில் நடைபெறக்கூடிய நிகழ்வுகள் அறிவிக்கப்பட்டன.
இதையடுத்து உற்சவத்துக்கான பூா்வாங்கப் பணிகள் உடனடியாக தொடங்கப்படுவதாக கோயில் நிா்வாகம் தெரிவித்தது.
இக்கோயில் பிரம்மோற்சவத்தில் செண்பக தியாகராஜசுவாமி உன்மத்த நடன நிகழ்வும், தேரோட்டம், சனீஸ்வர பகவான் தங்க காக வாகனத்தில் வீதியுலா உள்ளிட்டவை முக்கியமான நிகழ்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது.