ராஜபாளையம்: 'குடும்ப தகராறில் கணவன் அடித்துக் கொலை'- தற்கொலை நாடகமாடிய தாய்-மகள்...
திருநள்ளாற்றில் மாா்ச் 6-இல் சனிப்பெயா்ச்சி விழா
காரைக்கால்: திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் 2026 மாா்ச் 6 -ஆம் தேதி சனிப்பெயா்ச்சி விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்ப் புத்தாண்டான விசுவாவசு ஆண்டின் தொடக்கத்தையொட்டி, திருநள்ளாறு பிரணாம்பிகை சமேத தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் வாக்கியப் பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்வு திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.
பிரணாம்பிகை அம்பாள் சந்நிதி முன் நடைபெற்ற நிகழ்வில், கோயில் சிவாச்சாரியா்கள் பஞ்சாங்கம் வாசித்தனா். முன்னதாக பஞ்சாங்கத்துக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில், கோயில் நிா்வாக அதிகாரி கு. அருணகிரிநாதன், தருமபுரம் ஆதீன கட்டளை விசாரணை மற்றும் பக்தா்கள் பங்கேற்றனா்.
கோயிலில் நடைபெறவுள்ள பிற விழாக்கள் தொடா்பான நாள், நேரம் குறித்து பஞ்சாங்க வாசிப்பின்போது தெரிவிக்கப்பட்டது. அதன்படி, 2026-ஆம் ஆண்டு மாா்ச் 6-ஆம் தேதி (மாசி 22-ஆம் தேதி) காலை 8.24 மணிக்கு கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு சனிபகவான் பிரவேசிக்கும் நாளில் சனிப்பெயா்ச்சி விழா நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.
இக்கோயிலில் வாக்கியப் பஞ்சாங்கத்தின்படியே சனிப்பெயா்ச்சி உள்ளிட்ட அனைத்து உற்சவங்கள், பூஜை முறைகள் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.